பிரதமர் மோடி பயணிக்கும் விமானம் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்கத் தடை விதிப்பு

பிரதமர் மோடி பயணிக்கும் விமானம் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்கத் தடை விதிப்பு
Updated on
2 min read

இஸ்லாமாபாத்

பாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடி பயணம் செய்யும் விமானம் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க்கில் நடக்கும் ஐ.நா. பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் பிரதமர் மோடி வரும் 21-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

ஹாஸ்டன் நகரில் நடக்கும் அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசுகிறார். ஐ.நா. பொதுக்குழுக் கூட்டத்தில் வரும் 27-ம் தேதி உரையாற்றுகிறார். பிரதமராக 2-வது முறை பொறுப்பேற்றபின் மோடி ஐ.நா. சபையில் உரையாற்றுவது இதுதான் முதல் முறை.

பிரதமர் மோடி ஐ.நா.வில் உரையாற்றிய பின், அடுத்ததாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உரையாற்ற உள்ளார். இதுதவிர வரும் 24-ம் தேதி ஐ.நா. தலைமை அலுவலகத்தில் பொருளாதார சமூக கவுன்சில் கூட்டத்தில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசுகிறார். இதுதவிர பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பில், பிரதமர் மோடிக்கு விருது வழங்கப்பட உள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தி, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது.

இதனை முன்னிட்டு வரும் 21-ம் தேதி பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார். மோடி பயணிக்கும் விமானம் பாகிஸ்தான் வான்வெளி வழியாக நியூயார்க் செல்ல வேண்டியுள்ளது. இதனால் பாகிஸ்தான் வான்வெளியில் மோடி பயணிக்கும் விமானம் செல்ல முறைப்படி அந்நாட்டிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால், இந்தக் கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது. இதனை பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷி உறுதிப்படுத்தியுள்ளார்.

பின்னணி:

கடந்த 9-ம் தேதி தீவிரவாத நிகழ்வுகள் குறித்தும் தேசியப் பாதுகாப்பு குறித்தும் ஆலோசிப்பதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்லோவேனியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருந்தார். அவரின் வான்வழிப் பயணத்திற்கும் பாகிஸ்தான் அனுமதி மறுத்தது.

கடந்த பிப்ரவரி 26-ம் தேதி இந்திய வான்வழிப் போக்குவரத்துக்கு பாகிஸ்தான் தனது வான்வெளியைப் பயன்படுத்த அனுமதி மறுத்தது. மார்ச் மாதம் பகுதியளவு அனுமதியளித்தது. ஆனால் இந்திய விமானங்கள் பறக்க அனுமதியைத் தொடர்ந்து மறுத்தது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மத்திய அரசு, அரசியலமைப்பின் 370-வது பிரிவைத் திரும்பப் பெற்றது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை லடாக், ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. இந்திய அரசின் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தியாவுடன் வர்த்தக உறவு, ரயில், பஸ் போக்குவரத்தையும் ரத்து செய்தது. சர்வதேச அளவில் காஷ்மீர் விவகாரத்தைக் கொண்டு சென்று வருகிறது. மேலும், செப்டம்பர் மாதம் ஐ.நா.வில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினையை பிரதானமாக எழுப்ப பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in