

மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவில் பள்ளிக்கூடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மாணவர்கள் 26 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து இன்று (புதன்கிழமை) லைபீரியா பிரதமர் அலுவகம் தரப்பில், “லைபீரியாவின் தலைநகரம் மோன்ரோவியாவின் அருகே உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 26 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் பலியாகினர். இரண்டு பேர் உடலுக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலியான மாணவர்கள் அனைவரும் 10 முதல் 20 வயதுக்குள்ளானவர்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார பாதிப்பு காரணமாக தீ விபத்து நடந்துள்ளதாகவும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை லைபீரியா அதிபர் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
விபத்து குறித்து அதிபர் ஜார்ஜ் கூறும்போது, “விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு இது மிக கடினமான நேரம். அவர்களுக்கு மட்டுமல்ல அனைத்து லைபீரிய மக்களுக்கும் இது கடினமான நேரம். விபத்தில் பலியானவர்களுக்கு என் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
தீ விபத்து ஏற்பட்ட பள்ளிக் கூடத்தில் மாணவர்களின் உறவினர்கள் சூழ்ந்துள்ளனர். லைபீரியாவில் சமீபத்தில் ஏற்பட்ட மோசமான தீ விபத்தாக இது கருதப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.