சவுதி சென்றார் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர்

சவுதி சென்றார் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர்
Updated on
1 min read

வளைகுடா பகுதியில் மோதல் வலுத்துவரும் நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியோ சவுதி அரேபியா சென்றார்.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் , ''அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியோ சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அமீரகம் ஆகிய இரண்டு நாடுகளுக்கு அரசியல் ரீதியாகப் பயணம் மேற்கொள்கிறார்” என்று தெரிவித்துள்ளது.

மைக் போம்பியோவின் இந்தப் பயணத்தில் இன்று அவர் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானைச் சந்திக்கிறார். இந்தச் சந்திப்பில் சவுதியில் சமீபத்தில் நடத்தப்பட்ட எண்ணெய் ஆலைகள் மீதான தாக்குதல் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். இதனைத் தொடர்ந்து ஐக்கிய அமீரகம்செல்லும் அவர் இளவரசர் முகமது பின் சையத்தைச் சந்தித்து இரு நாடுகள் இடையேயான இருதரப்பு உறவு குறித்து ஆலோசிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னதாக சவுதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் வளப்பகுதியான ஹிஜ்ரா குரையாஸில் அரோம்கோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள, அப்கய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது சனிக்கிழமை ஆளில்லா விமானங்கள் மூலம் ஏமன் கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதலால் அங்கு 50 சதவீத உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்த உற்பத்தி நிறுத்தம் இன்னும் பல வாரங்களுக்குத் தொடரலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சவுதியில் உள்ள அந்த ஆலையில் ஏறக்குறைய 50 சதவீத எண்ணெய் உற்பத்தி அதாவது, நாள் ஒன்றுக்கு 57 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த உற்பத்தி பாதிப்பால், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது ஏமன் தீவிரவாதிகள் என்றாலும் அதன் பின்னணியில் ஈரான் இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.

சவுதி அரேபியாவின் எண்ணெய் ஆலை மீது ஈரான்தான் தாக்குதல் நடத்தியது எனக்கூறி அதற்கு ஆதாரமாக செயற்கைக்கோள் படம் ஒன்றையும் அமெரிக்கா வெளியிட்டது. இது அடிப்படை ஆதரமாற்ற குற்றச்சாட்டு என்று ஈரான் மறுத்தது. மேலும் அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை நடந்த வாய்ப்பே இல்லை என்றும் ஈரான் தெரிவித்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in