Published : 18 Sep 2019 03:17 PM
Last Updated : 18 Sep 2019 03:17 PM

மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பில் காஷ்மீர் முக்கியமாகப் பேசப்படாது: சீனா அறிவிப்பு

பெய்ஜிங்

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே அடுத்த மாதம் நடக்க இருக்கும் 2-வது அதிகாரபூர்வமான சந்திப்பின் போது காஷ்மீர் விவகாரம் முக்கியமானதாக இருக்காது என்று சீனா தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான அதிகாரபூர்வமற்ற முதல் சந்திப்பு கடந்த ஆண்டு உஹான் நகரில் நடந்தது. இந்த ஆண்டு 2-வது சந்திப்பு சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதற்கிடையே ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த மாதம் 5-ம்தேதி நீக்கி, 370 பிரிவைத் திரும்பப் பெற்றது. இந்தியாவின் இந்த நடவடிக்கையால் பாகிஸ்தான் சர்வதேச அரங்கில் இந்தியா மீது பல்வேறு புகார்கள் கூறி வருகிறது. ஆனால், காஷ்மீர் விவகாரம் உள்நாட்டுப் பிரச்சினை என்று மத்திய அரசு தெரிவித்ததால், எந்த நாடும் தலையிட மறுக்கின்றன.

ஆனால்,பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா, காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மூடிய அறையில் ரகசிய ஆலோசனை நடத்தியது. ஆனால் அதுகுறித்த விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை. இந்த சூழலில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே அடுத்த மாதம் நடக்கும் சந்திப்பின் போது காஷ்மீர் விவகாரம் பேசப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது.

இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யங் இன்று பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:

''பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான அதிகாரபூர்வமற்ற சந்திப்பு அடுத்த மாதம் நடக்கிறது. ஆனால் தேதி, இடம் குறித்து என்னால் இப்போது கூற இயலாது. இந்தக் கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் பேசப்படலாம். ஆனால், உறுதியாகப் பேசப்படுமா எனத் தெரியாது. இரு தலைவர்களும் என்ன பேசிக்கொள்ள, விவாதித்துக் கொள்ள விரும்புகிறார்களோ அதுகுறித்துப் பேச அவகாசம் அளிக்க வேண்டும்.

ஆனால், இரு தலைவர்களுக்கு இடையே காஷ்மீர் விவகாரம் முக்கிய விஷயமாகப் பேசப்படாது என்றே நினைக்கிறேன். ஆனால், இந்தியா- பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினைகுரியதாக இருக்கிறது என்று சீனா நம்புகிறது.

ஐநா தீர்மானத்தின்படி, இந்த விவகாரத்தில் இரு நாடுகளும் நட்புரீதியாக அமைதியான முறையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுத் தீர்க்க வேண்டும். எங்களுக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் நல்ல நட்பு நாடுகள். இரு நட்பு நாடுகளும் அமைதியாக இருக்கவே நாங்கள் விரும்புகிறோம். இரு தரப்புக்கும் இடையே அமைதி நிலவ எங்களால் முடிந்த பணிகளைச் செய்வோம்.

இந்தியா- சீனாவுக்கு இடையே எல்லையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இருதரப்புக்கும் சுமுகமான, நட்புறவு இருக்கிறது. சீனா எப்போதும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றும். இந்தியா- சீனா இடையே பரஸ்பர நம்பிக்கையைக் குலைக்கும் எதையும் நடக்கவிட மாட்டோம். இதேபோன்ற நிலையை இந்தியாவிடம் எதிர்பார்ப்போம்’’.

இவ்வாறு சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x