

பாங்காக்
தாய்லாந்தின் காஞ்சனாபுரி பகுதியில் உள்ள புத்தர் கோயிலில் ஏராளமான புலிகள் வளர்க்கப்பட்டன. இதன் காரணமாக இந்த கோயில், ‘புலிகள் கோயில்' என்று அழைக்கப்பட்டது. உலகம் முழுவ திலும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கோயிலுக்கு வருகை தந்தனர்.
இதனிடையே புத்தர் கோயிலில் இயற்கைக்கு மாறாக புலிகள் இனப்பெருக்கம் செய்யப்படுவதாகவும் வெளிநாடுகளுக்கு புலிகள் கடத்தப்படுவதாகவும், புலிகளின் உடல் பாகங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
இதன்பேரில் கடந்த 2016-ம் ஆண்டில் தாய்லாந்து போலீஸார் புத்தர் கோயிலில் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த 147 புலிகள் மீட்கப்பட்டு வன உயிரின பூங்காக்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
இந்நிலையில், புத்தர் கோயிலில் இருந்து மீட்கப்பட்ட புலிகளில், 86 புலிகள் உயிரிழந்துவிட்டதாகவும் 61 புலிகள் மட்டுமே உயிர் பிழைத்திருப்பதாகவும் தாய்லாந்து தேசிய வன உயிரியல் பூங்கா துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறிய போது, "புத்தர் கோயிலில் வன விலங்குகளுக்கான சூழலில் புலிகள் வளர்க்கப்படவில்லை. வாழ்வியல் சூழல் மாறியதால் வைரஸ் பாதிப்புகளால் புலிகள் இறந்து விட்டன’’ என்று தெரிவித்தனர். இதற்கு காஞ்சனாபுரி புத்தர் கோயில் பொறுப்பாளர் அதிதாட் ஸ்ரீமனி கடும் கண்டனம் தெரிவித் துள்ளார். அவர் கூறியதாவது:
ஆரம்பத்தில் கோயிலில் 6 புலிகள் மட்டுமே இருந்தன. அவை இனப்பெருக்கம் செய்து 147 புலிகளாகப் பெருகின. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கோயிலில் இருந்து புலிகளை அபகரித்துச் சென்றனர். அப்போது புலிகளுக்கு எவ்வித நோய் பாதிப்பும் கிடையாது. கோயிலில் திறந்த வெளியில் ஆரோக்கியமான சூழ்நிலையில் புலிகளை வளர்த்தோம். அவற்றை குகைகளில் அடைக்கவில்லை. ஆனால் வனஉயிரின பூங்காக்களில் அவை பரிதாபமாக உயிரிழந் துள்ளன. புலிகள் குறித்த போதிய புரிதல் இல்லாமை, அக்கறை யின்மை உள்ளிட்ட காரணங்களால் அவை இறந்துள்ளன. இதற்கு வனத்துறை அதிகாரிகளே முழுப் பொறுப்பேற்க வேண்டும். இவ் வாறு அவர் குற்றம் சாட்டியுள்ளார்.