

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போரில் ராணுவம் வெற்றி பெற்றதன் 5-ம் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப் பட்டது.
இந்த விழாவைப் புறக்கணித்த கனடா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மீது அதிபர் மகிந்த ராஜபக்சே கடுமையாகக் குற்றம் சாட்டினார்.
இலங்கையின் தெற்குப் பகுதியில் உள்ள மாத்தறையில் சுமார் 8 ஆயிரம் வீரர்கள் பங்கேற்ற ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இதில் ராஜபக்சே பேசியதாவது:
நாங்கள் போர் வெற்றி தினத்தை கொண்டாடவில்லை. நாட்டில் அமைதி திரும்பிய நாளைக் கொண்டாடுகிறோம். நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறோம்.
தீவிரவாதத்தால் இலங்கை பாதிக்கப்பட்டிருந்தபோது சில நாடுகளின் கண்களுக்கு எதுவுமே தெரியவில்லை. இலங்கை மக்களின் குரல் அவர்களின் காதில் விழவில்லை.
30 ஆண்டுகளுக்குப் பிறகு தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இலங்கை வெற்றி பெற்றது. அதன் 5-ம் ஆண்டு விழாவை இப்போது கொண்டாடுகிறோம். அதற்கு சில நாடுகள் எதிர்ப்புத் தெரிவிப்பது வியப்பளிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
கனடா தூதர் எதிர்ப்பு
இலங்கை அரசின் வெற்றிவிழாவில் பங்கேற்க கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தூதர்களுக்கு அரசு சார்பில் அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் பெரும்பாலான மேற்கத்திய நாடுகளின் தூதர்கள் விழாவில் பங்கேற்கவில்லை.
இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய கனடா தூதர் ஷெல்லி வொயிட்னிங் வெளிப்படையாக தனது எதிர்ப்பைத் தெரிவித்தார்.
“இலங்கை அரசு இதுபோன்ற விழாக்களை தவிர்த்து போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனரமைப்புப் பணிகளை தீவிரப்படுத்தலாம்” என்று அவர் கூறியுள்ளார்.