

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விமான கோளாறு காரணமாக மூன்று மணி நேரம் தாமதமாக ஸ்லோவேனியா சென்றடைந்தார்.
இதுகுறித்து ஏஎன்ஐ வெளியிட்ட செய்தியில், ”ஸ்விட்சர்லாந்திலிருந்து ஸ்லோவேனியா செல்ல வேண்டிய குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. எனவே விமான நிலையம் வந்தடைந்த ராம் நாத் கோவிந்த் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திரும்பி அவரது ஓட்டலுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். பின்னர் விமானத்தில் கோளாறு சரி செய்யப்பட்டு அவர் மூன்று மணி நேரம் தாமதமாக ஞாயிற்றுக்கிழமை ஸ்லோவேனியா சென்றடைந்தார்” என்றார்.
அரசுமுறைப் பயணமாக மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார் இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். இதனைத் தொடர்ந்து அவர் கடந்த திங்கட்கிழமை ஐஸ்லாந்து சென்றடைந்தார். குடியரசுத் தலைவருடன் அவர் மனைவி சவிதா கோவிந்தும் சென்றிருக்கிறார். அப்துல் கலாமுக்குப் பிறகு ஐஸ்லாந்து செல்லும் இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மட்டுமே.
ஐஸ்லாந்தை தொடர்ந்து 11 ஆம் தேதி ஸ்விட்சர்லாந்து சென்றடைந்த அவர் மூன்று நாடுகளில் கடைசி பயணமாக 15-ம் தேதி ஸ்லோவேனியா சென்றடைந்தார்.
அரசியல் ரீதியான இந்த மூன்று நாடுகளின் சுற்றுப் பயணத்தில் பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார் ராம்நாத் கோவிந்த்.