அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் : கோப்புப்படம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் : கோப்புப்படம்

கச்சா எண்ணெய் விலை உயர்வு: கையிருப்பை பயன்படுத்த அமெரிக்க அரசுக்கு அதிபர் ட்ரம்ப் அனுமதி 

Published on

வாஷிங்டன்

சவுதிஅரேபியாவில் உள்ள அரோம்கோ எண்ணெய் ஆலையில் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயரத் தொடங்கியுள்ளது, இதனால், கையிருப்பில் இருந்து கச்சா எண்ணெயை பயன்படுத்திக்கொள்ள அமெரிக்க அரசுக்கு அதிபர் ட்ரம்ப் அனுமதியளித்துள்ளார்.

சவுதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய்க் வளப்பகுதியான ஹிஜ்ரா குரையாஸில் அரோம்கோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள, அப்கய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு ஆளில்லா விமானங்கள் மூலம் ஏமன் கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தினார்கள்.

இந்த தாக்குதலால் அங்கு 50 சதவீத உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்த உற்பத்தி நிறுத்தம் இன்னும் பலவாரங்களுக்கு தொடரலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சவுதியில் உள்ள அந்த ஆலையில் ஏறக்குறைய 50 சதவீத எண்ணெய் உற்பத்தி அதாவது, நாள் ஒன்றுக்கு 57 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது

இந்த உற்பத்தி பாதிப்பால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 10 சதவீதம் அதிகரித்தது. அமெரிக்காவின் நியூயார்க் பரிமாற்றச் சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று 5.61 டாலர் அளவுக்கு உயர்ந்து, 60.46 டாலராக அதிகரித்தது. பிரன்ட் கச்சா எண்ணெய் 11.77 சதவீதம் விலை உயர்ந்து 67.31 டாலராக அதிகரித்தது. இனிவரும் காலங்களிலும் இந்தவிலை அதிகரிக்கும் எனத் தெரிகிறது

இதையடுத்து, அமெரிக்காவின் பெட்ரோலிய கச்சா எண்ணெய் கையிருப்பில் இருந்து கச்சா எண்ணெயை பயன்படுத்திக்கொள்ள அரசுக்கு அதிபர் ட்ரம்ப் அனுமதியளித்துள்ளார்

இதுகுறித்து அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில் கூறுகையில், " சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய் ஆலையில் நடத்தப்பட்ட தாக்குதல் கச்சா எண்ணெய் விலை உயர்வில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆதலால், அமெரிக்காவின் பெட்ரலிய கச்சா எண்ணெய் கையிருப்பில் இருந்து அரசு எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கிறேன். சர்வதேச சந்தையில் நிலை சீரடையும்வரை கையிருப்பை பயன்படுத்தலாம். இந்த தாக்குதலுக்கு யார் காரணம் என்பது குறித்து சவுதி அரேபியா கூறும்வரை காத்திருப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த தாக்குதலுக்கு ஏமன் கிளர்ச்சிப்படையினர் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்கள். ஆனால், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, இந்த தாக்குதலுக்கு காரணமான ஏமன் கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் உதவி செய்து வருகிறது என்று குற்றம்சாட்டினார். ஆனால், அமெரிக்காவின் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஈரான் அரசு, அமெரிக்கா மீது எந்தநேரமும் போருக்கு தயாராக இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது

ஐஏஎன்எஸ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in