மரபான போர் மூண்டால் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றுவிடும்: இம்ரான் கான் ஒப்புதல்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் : கோப்புப்படம்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் : கோப்புப்படம்
Updated on
1 min read

இஸ்லாமாபாத்,

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மரபான போர் மூண்டால், அதில் பாகிஸ்தான் தோற்றுவிடும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஒப்புக்கொண்டுள்ளார்.

அதேசமயம், இரு அணு ஆயுத நாடுகள் மரபான போர் செய்தால், அது இறுதியாக அணுஆயுதப் போரில்தான் முடியும் என்று அறிவேன் என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மத்திய அரசு, அரசியலமைப்புச் சட்டத்தில் 370 பிரிவையும் திரும்பப் பெற்றது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தையும் லடாக், ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது.
இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. சர்வதேச அளவில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பி ஆதரவு தேட பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது. ஆனால், பாகிஸ்தான் கோரிக்கைக்கு பெரும்பாலான நாடுகள் ஆதரவு தெரிவிக்கவில்லை.

இதனால் இந்தியா எல்லையில் பாகிஸ்தான் வீரர்களைக் குவிப்பதும், போர்விமானங்களை நிறுத்தவும் என பதற்றமான சூழலை ஏற்படுத்திவருகிறது. ஐ.நா.விலும் காஷ்மீர் பிரச்சினையை பாகிஸ்தான் எழுப்பியபோது, இந்தியா சார்பில் தகுந்த பதிலடி தரப்பட்டது.

இந்த சூழலில் அல் ஜஸிரா சேனலுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேட்டி அளித்துள்ளார். அதில் காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது:

நாங்கள் ஒருபோதும் அணு ஆயுதப் போரில் ஈடுபடமாட்டோம். நான் போருக்கு எதிரானவன். அதில் தெளிவாக இருக்கிறேன். ஆனால், மரபான போர் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் மூண்டால் அந்த போர் பெரும்பாலும் அணு ஆயுதப் போரில் முடியவே அதிகமான வாய்ப்பு இருக்கிறது.

மரபான போர் ஏற்படுவதில் இருந்து கடவுள் எங்களை தடுத்திருக்கிறார், அந்த போர் ஏற்பட்டால் நாங்கள் இந்தியாவிடம் தோற்றுவிடுவோம்.

இவ்வாறு இம்ரான் கான் தெரிவித்துள்ளார்

ஏஎன்ஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in