

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் அமைதிப் படை தூதுவராகச் சென்ற இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் மாயமான நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில், ஐ.நா. சார்பில் அமைதிப்படை தூதுவர்களை அனுப்பும் நாடுகளில் இந்தியா முக்கியமான நாடாக உள்ளது. அங்கு இந்திய ராணுவ வீரர்கள் பலர் அமைதிப் படையினராக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதுமட்டுமல்லாது காங்கோவில் அங்குள்ள இந்திய அமைதிப் படை வீரர்களுக்கு நார்த் கிவு மாகாணத்தின் கோமா என்ற நகரில் தலைமையகமும் அமைந்துள்ளது.
காங்கோவில் நடக்கும் வன்முறை சம்பவங்களை தவிர்க்க ராணுவ வீரர்கள் மட்டும் அல்லாது பொறியாளர்கள், மருத்துவர்கள் குழுக்களையும் இந்தியா காங்கோவுக்கு அமைதி மார்க்கமாக அனுப்பியுள்ளது.
இந்நிலையில் அங்கு பணியாற்றிய இந்திய ராணுவ அதிகாரி கவுரவ் சோலங்கி திடீரென மாயமாகியுள்ளார். செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி கயாகிங் நகரில் உள்ள கிவு ஏரியில் பணிக்குச் சென்ற கவுரவ் ,அனைத்து வீரர்களும் தங்கள் பகுதிக்கு திரும்பிய நிலையில் அவர் மட்டும் மாயமாகியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து படகு மற்றும் ஹெலிகாப்டர்களைக் கொண்டு கவுரவ்வை தேடும் பணி நடந்து வருகிறது. நான்கு நாட்களுக்கு மேலாக தேடுதல் பணி தொடர்ந்த நிலையில், தற்போது இந்திய ராணுவ அதிகாரியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர், ” கோமாவில் பணிபுரிந்த இந்திய ராணுவ வீரர் கவுரவ் கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து மாயமானார். இந்த நிலையில் அவர் உடல் கிவு ஏரியிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. ” என்று தெரிவித்துள்ளது.
இந்திய ராணுவ வீரர் மரணத்துக்கு காங்கோ ராணுவம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை இரங்கல் தெரிவித்துள்ளது.