காஷ்மீர் குறித்து உலக நாடுகள் கூடுதலாக எதிர்வினை ஆற்றியிருக்க வேண்டும்: இம்ரான் கான்

காஷ்மீர் குறித்து உலக நாடுகள் கூடுதலாக எதிர்வினை ஆற்றியிருக்க வேண்டும்: இம்ரான் கான்
Updated on
1 min read

காஷ்மீர் தொடர்பாக உலக நாடுகள் இன்னும் கூடுதலாக எதிர்வினையாற்றி இருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரஷ்யா சென்றுள்ள இம்ரான் கான் பேசும்போது, “ இந்தியா காஷ்மீரை இணைத்துள்ளது. எனவே காஷ்மீர் இனி இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு சர்ச்சைக்குரிய பிரதேசமாக இருக்காது. இந்தியா காஷ்மீரை தனது ஒரு பகுதியாக ஆக்கியுள்ளது.

காஷ்மீர் விவகாரம் குறித்து உலக நாடுகள் கூடுதலாக எதிர்வினையாற்றுவார்கள் என்று நான் எதிர்பார்த்தேன். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியா - பாகிஸ்தான் இடையே பிளவு அதிகரித்தால் அது அணுசக்தி வைத்துள்ள இரு நாடுகள் எதிர்காலத்தில் நேருக்கு நேர் மோதும் சூழலை உருவாக்கலாம்” என்றார்.

முன்னதாக, காஷ்மீர் விவகாரத்தில் உலகம் இந்தியாவைத்தான் நம்புகிறது. பாகிஸ்தானை அல்ல. சர்வதேச சமூகத்திடம் இருந்து காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானால் ஆதரவைப் பெற முடியவில்லை என்று முன்னரே பாகிஸ்தான் தெரிவித்திருந்தது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மத்திய அரசு, அரசியலமைப்பின் 370-வது பிரிவைத் திரும்பப் பெற்றது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை லடாக், ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது.

இந்திய அரசின் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தியாவுடன் வர்த்தக உறவு, ரயில், பஸ் போக்குவரத்தையும் ரத்து செய்தது. சர்வதேச அளவில் காஷ்மீர் விவகாரத்தைக் கொண்டு சென்று வருகிறது. மேலும், ஐ.நா.வில் நடந்த பொதுக்கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினையை பிரதானமாக பாகிஸ்தான் எழுப்பியது. இதற்கு தங்கள் நாட்டு உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in