Published : 13 Sep 2019 04:07 PM
Last Updated : 13 Sep 2019 04:07 PM

பயணியின் பையிலிருந்து மாம்பழம் திருடியதாக வழக்கு: துபாய் விமான நிலையத்தில் பணிபுரியும் இந்தியருக்கு சிக்கல்

அபுதாபி

துபாய் விமான நிலையத்தில் பணிபுரியும் இந்தியர் ஒருவர் மீது மாம்பழங்களைத் திருடியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் வரும் 23 (செப்.23) தீர்ப்பு வழங்கப்படுகிறது.

ஒருவேளை குற்றம் நிரூபணமானால் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. மேலும், மாம்பழத்துக்கான பணத்தையும் அதே மதிப்பில் அபராதத்தையும் அவர் செலுத்த வேண்டியிருக்கும் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

நடந்தது என்ன?
துபாய் சர்வதேச விமான நிலையத்தில் பணியிலிருந்த இந்தியர் ஒருவர், கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பயணி ஒருவருடைய பையிலிருந்து 2 மாம்பழங்களை எடுத்து உண்கிறார். இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகிறது. இதனை கண்காணிப்புக் கேமரா காட்சிகளை சோதிக்கும் பணியில் இருந்த ஊழியர் ஒருவரும் உறுதி செய்கிறார்.

இந்த அடிப்படையிலேயே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இப்போது அந்த இந்தியர் மீது 6 திர்ஹாம் (துபாய் பணம்) மதிப்பு கொண்ட 2 மாம்பழங்களைத் திருடியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இருப்பினும், 2017-ல் நடந்த சம்பவத்துக்கு எதற்காக 2019-ல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பது மட்டும் தெரியப்படுத்தப்படவில்லை.

தாகத்துக்காக சாப்பிட்டேன்..

இந்நிலையில், வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "நான் அப்போது துபாய் விமானநிலையத்தின் 3-வது முனையத்தில் பணியில் இருந்தேன். பயணிகளின் உடைமைகளை கன்வேயர் பெல்டில் எடுத்துவைப்பதுதான் எனது வேலை. அன்று எனக்கு திடீரென தாகம் ஏற்பட்டது. அப்போது பயணி ஒருவரின் பையில் பழங்கள் இருப்பதைக் கண்டேன். அதிலிருந்து இரண்டு மாம்பழங்களை மட்டுமே எடுத்துச் சாப்பிட்டேன். 2018-ல் இது தொடர்பாக எனக்கு போலீஸ் சம்மன் அனுப்பியது. எனது வீட்டை சோதனை செய்தனர். ஆனால் என் வீட்டில் திருட்டுப் பொருள் ஏதுமில்லை. இப்போது என் மீது திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர்" என்றார்.

செப்டம்பர் 23-ல் வெளியாகும் தீர்ப்பு, மாம்பழ திருட்டு வழக்கில் சிக்கிய இந்தியருக்கு சிறை தண்டனையைப் பெற்றுத்தருமா இல்லை வெறும் அபராதத்துடன் விட்டுவிடுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

-ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x