Published : 12 Sep 2019 02:11 PM
Last Updated : 12 Sep 2019 02:11 PM

பூமி 2.0: பூமியில் இருப்பதைப் போன்று தண்ணீர், தட்ப வெப்பநிலை உள்ள புதிய கிரகம் முதல் முறையாக கண்டுபிடிப்பு: மனிதர்கள் வாழ முடியுமா?

லண்டன்,

நம் சூரியக் குடும்பத்தில் இருந்து 110 ஒளி ஆண்டுகள் தொலைவில் பூமியில் இருப்பதைப் போன்று தண்ணீர், தட்பவெப்பநிலை கொண்ட புதிய கிரகத்தை விண்வெளி ஆய்வாளர்கள் முதல் முறையாகக் கண்டறிந்துள்ளனர்.

இதுதொடர்பான ஆய்வுக் கட்டுரை 'ஜர்னல் ஆப் நேச்சர் அஸ்ட்ரானமி' என்ற இதழில் வெளியாகியுள்ளது.

கே2-18பி (K2-18b) என்று இந்தக் கிரகத்துக்கு விண்வெளி ஆய்வாளர்கள் பெயரிட்டுள்ளனர். இந்தக் கிரகம் பூமியைக் காட்டிலும் அடர்த்தியில் 8 மடங்கு பெரியது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சூரியக் குடும்பத்தில் இருந்து வெளியே இருக்கும் கோள்களில் முதல் முறையாகத் தண்ணீரும், காலநிலையும் பூமியில் இருப்பதைப் போன்று இருப்பது வியப்புக்குரியது. மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியங்களும் இருக்கின்றனவா என்பது அடுத்தகட்ட ஆய்வில் அறிய முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏறக்குறைய பூமியில் இருந்து 110 ஒளி ஆண்டுகள் தொலைவில் இந்தக் கிரகம் அமைந்துள்ளது. ஒரு ஒளி ஆண்டின் தொலைவு என்பது 9 லட்சத்து 46 ஆயிரம் கோடி கி.மீ. என்பது குறிப்பிடத்தக்கது.

லண்டனில் உள்ள யுனிவர்சிட்டி காலேஜில் பணியாற்றும் பேராசிரியரும், கட்டுரையை எழுதியவரான எஞ்சலோ திசாரஸ் கூறுகையில், "சூரியக் குடும்பத்துக்கு அப்பால் ஒரு கிரகத்தில் தண்ணீர் இருப்பதும், அங்கு மனிதர்கள் வாழக்கூடிய காலநிலையும் இருப்பதாகக் கண்டுபிடித்ததே வெற்றிகரமானது. அதிலும் பூமி தவிர்த்து மற்றொரு கிரகத்தில் தண்ணீர் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது

கே2-18பி கிரகம் என்பது பூமி-2.0 என்று கூறிவிட முடியாது. பூமியின் அடர்த்தியைக் காட்டிலும் அதிகமானது இந்தக் கிரகம் என்பதால் பல்வேறுவிதமான வளிமண்டல வாயுக் கலப்புகள் இருக்கும். ஆனால், இந்தக் கிரகம் கண்டுபிடிக்கப்பட்டதற்குப் பின், பூமி தனித்துவமானது என்ற கேள்விக்கு நம்மை நெருக்கமாக அழைத்து வந்துள்ளது" எனத் தெரிவித்தார்.

நாசா மற்றும் எஎஸ்ஏ அமைப்பின் விண்வெளி தொலைநோக்கி மூலம் இந்தக் கிரகத்தைக் கண்டறிந்துள்ளார். ஏறக்குறைய 2016 முதல் 2017-ம் ஆண்டுவரை ஆய்வில் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்த ஆய்வின்போது, அந்த கே2-18பி கிரகத்தில் இருந்து நீர் ஆவியாவதற்கான மூலக்கூறுகளைக் கண்டறிந்துள்ளனர். அந்த மூலக்கூறில் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் அந்தக் கிரகத்தின் வளிமண்டலத்தில் இருந்துள்ளது என்று விண்வெளி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் அந்த மூலக்கூறுகளில் நைட்ரஜன் மற்றும் மீத்தேன் இருக்கலாம். தற்போதுள்ள ஆய்வுகளின்படி இன்னும் சரியாக ஆய்வு செய்யப்படவில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்தக் கிரகத்தின் வளிமண்டலத்தில் நீர் இருக்கும் சதவீதம், மேகக்கூட்டம் ஆகியவை குறித்து தீவிரமாக ஆய்வு செய்யப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது.

இந்தக் கிரகத்தில் அதிகமான அளவு சிறிய அளவிலான சிவப்பு நட்சத்திரங்கள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால் பூமியைக் காட்டிலும் அதிகமான அளவு கதிர்வீச்சை உமிழும் தன்மை கொண்டதாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்

லண்டனில் உள்ள யுனிவர்சிட்டி காலேஜில் பணியாற்றுவரும் கட்டுரையை எழுதிய மற்றொரு பேராசிரியர் இங்கோ வால்ட்மான் கூறுகையில், "நாசாவின் கெப்லர் விண்கலன் கடந்த 2015-ம் ஆண்டு கே2-18பி கிரகத்தைக் கண்டுபிடித்தது. பூமிக்கும் நெப்டியூன் கிரகத்துக்கும் இடையே நூற்றுக்கணக்கான சூப்பர் எர்த்கள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் கே2-18பி.

அடுத்த 20 ஆண்டுகளில் நாம் இன்னும் ஏராளமான சூப்பர் எர்த்களைக் கண்டுபிடிப்போம். அதற்கான தொலைநோக்கி வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறேன். ஆனால், மனிதன் வாழ்வதற்கான சூழல் இருக்கும் முதல் கிரகமாக பூமிக்கு அடுத்து இது இருக்கலாம்" எனத் தெரிவித்தார்.

லண்டனில் உள்ள யுனிவர்சிட்டி காலேஜில் பணியாற்றுவரும் விண்வெளி ஆய்வாளரும் பேராசிரியருமான ஜியோவன்னா டினிட்டி கூறுகையில், " கே2-18பி கிரகத்தில் தண்ணீர் இருப்பதைக் கண்டுபிடித்தது பிரம்மிக்க வைக்கிறது.

மனிதர்கள் வாழக்கூடிய அளவுக்கு சூழலையும், தட்பவெப்ப நிலையையும், தண்ணீரையும் கொண்டிருக்கும் ஒரு கிரகத்தையும் முதல் முறையாகக் கண்டறிந்துள்ளோம். இங்கிருக்கும் தட்ப வெப்பத்தைப் பார்க்கும் போது தண்ணீர் உறைநிலையில் இல்லாமல் திரவ வடிவத்தில்தான் இருக்க வாய்ப்பு உள்ளது" எனத் தெரிவித்தார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x