Published : 12 Sep 2019 10:31 AM
Last Updated : 12 Sep 2019 10:31 AM

அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பிய நாடுகளைக் குறிவைத்து தாக்குங்கள்: அல்கொய்தா தலைவர் வீடியோ மூலம் எச்சரிக்கை

கெய்ரோ,

அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளைக் குறிவைத்து தாக்க வேண்டும் என்று அல்கொய்தா தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி வீடியோ மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட 18-வது ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில், அல்கொய்தா தலைவர் தங்களின் ஆதரவாளர்களுக்கு இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரட்டை கோபுரத்தின் மீது விமானத்தை மோதச் செய்து அல்கொய்தா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் நடத்தப்பட்ட 18-வது ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.

18-வது ஆண்டு நினைவு நாளின்போது, ஆப்கானிஸ்தானில் செயல்பட்டுவரும் தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் தலைவர் நூர் வாலி மெஹ்சுத்தை சர்வதேச தீவிரவாதியாக அமெரிக்கா அறிவித்தது.

இந்த சூழலில் அல்கொய்தா அமைப்பின் தலைவரும் 68-வயதான அல் ஜவாஹிரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 33 நிமிடங்கள் 28 வினாடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோவில் பல்வேறு விஷயங்களைக் குறிப்பிட்டுள்ள ஜவாஹிரி, மேற்கத்திய நாடுகளைக் குறிவைத்து இனிமேல் தாக்க வேண்டும் என்று தங்களின் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அந்த வீடியோவை சஹாப் மீடியோ அறக்கட்டளை வெளியிட்டுள்ளது. ஜிகாதிகளைக் கண்காணித்து வரும் எஸ்ஐடிஇ புலனாய்வுக் குழு இந்த வீடியோவைக் கண்டறிந்து வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் அல் ஜஹாவிரி கூறுகையில், " அல்கொய்தா அமைப்பில் பற்றாளராக இருக்கும் சிலர் எதிரி நாட்டு ராணுவத்திடம், போலீஸாரிடம் சிக்கி சிறைக்குச் சென்றவுடன் தங்களின் எண்ணத்தில் இருந்து மாறிவிடுகிறார்கள். அது தவறானது. அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை நினைத்து நம்முடைய எண்ணத்தை மாற்றக்கூடாது.

ஜிகாதியாக மாறிவிட்டால், நம்முடைய நோக்கம் முழுமையும் ராணுவத்தை இலக்காக வைக்க வேண்டும். அமெரிக்க ராணுவம் உலகின் அனைத்து இடங்களிலும் தங்களின் இருப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். உலகின் கிழக்கில் இருந்து மேற்கு வரை அமெரிக்க ராணுவம் பரவி இருக்கிறது. உங்களின் நாடுகள் அமெரிக்கர்களால் சிதறிடிக்கப்படுகின்றன, ஊழல் பரப்பி விடப்படுகின்றன.

இதைத் தடுக்க வேண்டும். அல்கொய்தா அமைப்பில் உள்ளவர்கள் அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராகத் தாக்குதலை தீவிரப்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

எகிப்தைச் சேர்ந்த மருத்துவரான அல் ஜவாஹிரி கடந்த 2011-ம் ஆண்டு பாகிஸ்தானின் அபாத்தாபாத்தில் அமெரிக்க ராணுவத்தால் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பின் அந்த அமைப்புக்குத் தலைவரானார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பதுங்கி வாழ்ந்து வந்த அல் ஜவாஹிரிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மோசமான நிலையில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், அது உறுதிப்படுத்தப்படவில்லை

அல்கொய்தா அமைப்பில் வளர்ந்து வரும் இளம் தலைவர் ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின் லேடன் உள்ளார் என்று கூறப்பட்டாலும், அமெரிக்க குண்டுவீச்சில் அவர் கொல்லப்பட்டார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனாலும் அந்தச் செய்தியும் உறுதி செய்யப்படவில்லை.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x