Published : 12 Sep 2019 09:54 AM
Last Updated : 12 Sep 2019 09:54 AM

தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் தலைவர் சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பு: அதிபர் ட்ரம்ப் திடீர் உத்தரவு

வாஷிங்டன்,

தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) அமைப்பின் தலைவர் நூர் வாலி மெஹ்சுத்தை சர்வதேச தீவிரவாதியாக அமெரிக்கா நேற்று அறிவித்தது.

அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட 18-வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில், மெஹசுத்தை 'உலக அளவில் குறிப்பிடத்தகுந்த தீவிரவாதி' என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவில் அதிபர் ட்ரம்ப் நேற்று கையொப்பமிட்டார்.

ஆப்கானிஸ்தானில் இருந்த தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் தலைவர் முல்லா பசுல்லா கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் இறந்துவிட்டார். அவரின் மறைவுக்குப் பின் நூர் வாலி மெஹ்சுத் தலைவராகப் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், "கடந்த 2018-ம் ஆண்டு டிடிபி தலைவர் முல்லா பசுல்லா மறைவுக்குப் பின் தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் தலைவராக நூர் வாலி என்ற முப்தி நூர் வாலி மெஹ்சுத் பொறுப்பேற்றுக்கொண்டார். நூர்வாலி தலைமையில் பாகிஸ்தானில் நடந்த பல்வேறு தாக்குதலுக்கு டிடிபி அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான்(டிடிபி) அமைப்பின் தலைவர் நூர் வாலி மெஹ்சுத்: படம் உதவி ட்விட்டர்

இத்தீவிரவாத அமைப்பும், தீவிரவாதியும் இனிமேல் எந்தவிதமான செயல்களும் செய்வதை முடக்க அமெரிக்கா நடவடிக்கை எடுக்கிறது. இந்த அமைப்பின் சொத்துகள், பொருட்கள், வங்கிக் கணக்குகள் ஆகியவை அமெரிக்காவில் இருந்தால் அவை முடக்கப்படும். அமெரிக்கர்கள் இந்த அமைப்புடன் எந்தவிதமான பரிமாற்றங்களும் வைத்துக்கொள்ள தடை செய்யப்படுகிறார்கள். மெஹ்சுத்தை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டு டிடிபி தீவிரவாத அமைப்பு தோற்றுவிக்ககப்பட்டு பாகிஸ்தானில் மிக மோசமான தீவிரவாத அமைப்பாக மாறியது. இதுவரை பாகிஸ்தானில் மட்டும் டிடிபி தீவிரவாத அமைப்பு கடந்த 12 ஆண்டுகளில் 1,400 தீவிரவாதத் தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளது.

உலக அளவில் குறிப்பிடத்தகுந்த தீவிரவாதிகள் பட்டியலில் டிடிபி, ஹிஸ்புல்லா, ஹமாஸ், பாலஸ்தீனிய இஸ்லாமிக் ஜிஹாத், ஐஎஸ் அமைப்பு, ஐஎஸ் பிலிப்பைன்ஸ், ஐஎஸ்ஐஎஸ் மேற்கு ஆப்பிரிக்கா, அல்கொய்தா ஆகியவற்றுடன் மெஹ்சுத்தும் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ நிருபர்களிடம் கூறுகையில், "தீவிரவாதிகளுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு வலு சேர்க்கும் வகையில், மற்றொரு உத்தரவை அதிபர் ட்ரம்ப் பிறப்பித்து, கையொப்பமிட்டுள்ளார்.

இந்த உத்தரவின் மூலம் தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளிக்கும் தனிமனிதர்கள், குழுக்கள், நிதி உதவி அளிக்கும் அமைப்புகள் ஆகியவற்றை இலக்காக வைத்து நடவடிக்கை எடுக்க முடியும். இந்த உத்தரவின் மூலம் தீவிரவாதிகளுக்குக் கிடைக்கும் உதவிகள், ஆயுத உதவி, ஆதரவு ஆகியவற்றைத் தடை செய்ய முடியும்" எனத் தெரிவித்தார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x