Published : 11 Sep 2019 07:41 PM
Last Updated : 11 Sep 2019 07:41 PM

பணி நிரந்தரமற்ற ஒப்பந்த ஊழியத்துக்கு முற்றுப்புள்ளி: மைல்கல் சட்டம் இயற்றியது கலிபோர்னியா மாகாணம்

சான் பிரான்சிஸ்கோ, ஏ.எப்.பி

கலிபோர்னியாவில் நிரந்தரமற்ற வகையில் ஒப்பந்த ஊழியர்களை நியமிக்கும் நிறுவனங்களின் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மைல்கல் சட்டம் இயற்றியுள்ளது அம்மாகாண அரசு.

இதனால் உபர் மற்றும் லிப்ட் (Uber and Lyft) ஆகிய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை நிரந்தரப் பணியாளர்களாக நடத்த வேண்டும் என்று இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் மாற்றியுள்ளது.

பணி நிரந்தரமற்ற ஒப்பந்த ஊழியர்களுக்கு மருத்துவச் சலுகைகள், குறைந்த பட்ச ஊதியச் சலுகை ஆகியவை இல்லாமல் இருந்தது. ஆனால் இனி அந்தவகையில் யாரையும் பணியில் அமர்த்த முடியாது என்பதோடு ஏற்கெனவே இருக்கும் ஒப்பந்த ஊழியர்களும் நிரந்தரப் பணியாளர்களுக்கு உண்டான அத்தனை சலுகைகளையும் பெறுமாறு சட்ட மசோதாவை கலிபோர்னியா அரசு நிறைவேற்றியுள்ளது.

அசெம்ப்ளி மசோதா 5-ன் கீழ் கலிபோர்னியாவின் தொழிலாளர்கள் நிறுவனத்தினால் அவர்கள் பணி கட்டுப்படுத்தப்படுகிறது என்றால் அல்லது நிறுவனத்தின் ரெகுலர் வர்த்தகத்தின் ஒரு அங்கமாக இருக்கிறார்கள் எனும் பட்சத்தில் அவர்களும் நிரந்தரப் பணியாளர்களே. இவர்கள் ஒப்பந்த ஊழியர்கள் அல்ல.

இந்த மசோதா இப்போது ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளது, இதைப்பார்த்து நியூயார்க் அரசும் சட்டம் கொண்டு வர வாய்ப்புள்ளது. ஒப்பந்த ஊழியத்தை எதிர்த்து அமெரிக்காவில் போரட்டங்கள் வலுத்து வருகின்றன.

இந்த சட்டம் தங்கள் வர்த்தகத்துக்கு இடர்பாடு விளைவிக்கும் என்று உபர், மற்றும் லிப்ட் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால் இந்த மசோதா குறித்து ஜனநாயகக் கட்சியின் லொரீனா கொன்சாலேஸ் கூறும்போது, “வர்த்தக நிறுவனங்கள் தங்கள் செலவுகளை மக்கள் வரிப்பணத்தின் மீதும் தொழிலாளர்கள் மீதும் திணிப்பதை நல்ல மனசாட்சியுடன் நாங்கள் அனுமதிக்க முடியாது. தொழிலாளப் பெண்கள் ஆண்கள் ஆகியோரின் நலன்களை நாங்கள் பார்த்தாக வேண்டும். வால் ஸ்ட்ரீட் மற்றும் விரைவில் செல்வந்தர்களாக விழைபவர்களுக்காக நாங்கள் சட்டம் இயற்ற முடியாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x