Published : 11 Sep 2019 06:09 PM
Last Updated : 11 Sep 2019 06:09 PM

பிரிட்டிஷ் விவசாயிகள் கறவை மாடுகள் வைத்திருந்ததற்கான பழமையான ஆதாரம் கண்டுபிடிப்பு

லண்டன்,

பிரிட்டிஷ் விவசாயிகள் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கறவை மாடுகள் வைத்திருந்ததற்கான ஆதாரங்களைக் கண்டுபிடித்துள்ளதாக லண்டன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொல்பொருள் ஆய்வின்மூலம் கிடைத்துள்ள 6,000 ஆண்டுகள் பழமையான பிரிட்டிஷ் விவசாயிகளின் பற்களில், உலகில் வேறெங்கும் கண்டறியப்படாத சான்றுகளுடன், பால் நுகர்வுக்கான ஆரம்ப காலகட்ட நேரடி ஆதாரங்கள் கிடைத்திருப்பதை அறிவியல்பூர்வமாக அவர்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.

இங்கிலாந்தின் யார்க் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான குழு, இங்கிலாந்தில் கற்காலத்தில் வாழ்ந்த நபர்களைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கியது. இதில் ஏழு கற்கால நபர்களின் கனிமப்படுத்தப்பட்ட பல் தகட்டில் அடங்கியுள்ள பீட்டா லாக்டோகுளோபூலின் என்ற பால் புரதத்தை அடையாளம் கண்டது.

பிரிட்டனில் கற்காலம் கிமு 4,000 முதல் 2,400 வரை விவசாயம் தோன்றியதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிரிட்டானிய கற்கால மனிதர்கள், அந்த பழங்கால விவசாயத்திலேயே கோதுமை மற்றும் பார்லி போன்றவை பயிரிட்டதுடன் அக்கால கட்டத்தில் பசுக்கள், செம்மறி ஆடுகள், பன்றி மற்றும் ஆடுகள் போன்றவற்றை வளர்த்ததாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட காலகட்டத்தைப் பற்றிய ஆய்வுகளைப் பொருத்திப் பார்க்கும்போது இவர்கள் கறவை மாடுகள் வைத்திருந்ததற்கான அடையாளங்களை நாம் உறுதி செய்ய முடிகிறது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இங்கிலாந்தின் யார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முதன்மை ஆய்வாளர் சோஃபி சார்ல்டன் கூறுகையில்,

தொல்பொருள் ஆய்வில் கிடைத்த ஆறாயிரம் ஆண்டு பழமையான மனிதனின் பல் தகடுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில் அன்றைய மனிதனின் பல்லில் சுரந்த உமிழ்நீர் கூறுகளில் டார்ட்டர் அல்லது பல் கால்குலஸ் படிந்திருப்பதை ஆய்வில் கண்டறியப்பட்டது. அவை பசுக்களின் பால் புரதங்கள் ஆகும்.

பால் புரதங்களின் கண்டுபிடிப்பு மிகவும் சுவாரஸ்யமானது, ஏனெனில் சமீபத்திய மரபணு ஆய்வுகள் கற்காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு பாலில் உள்ள லாக்டோஸை ஜீரணிக்கும் திறன் இன்னும் இல்லை என்று கூறுகின்றன.

மிகக் குறைந்த அளவு பால் குடிப்பதால், இந்த காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள் மிகவும் நோய்வாய்ப்பட்டிருப்பார்கள், இந்த ஆரம்பகால விவசாயிகள் அதன் லாக்டோஸ் உள்ளடக்கத்தைக் குறைக்க பாலை, ஒருவேளை சீஸ் போன்ற உணவுப் பொருட்களாக பதப்படுத்தியிருக்கலாம்.

பழங்கால தனி மனிதர்களின் பல் தகடுகளில் பால் நுகர்வு மற்றும் செயலாக்கத்தைப் பற்றிய கூடுதல் நுண்ணறிவுகளை நமக்கு எதிர்கால ஆய்வுகள் வழங்கக்கூடும், அப்போது பாலில் உள்ள லாக்டேஸை அவர்கள் எவ்வாறு நீக்கி அருந்தினர் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

இவ்வாறு யார்க் பல்கலைக்கழக ஆய்வாளர் சார்ல்டன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x