

சிரியாவில் அமெரிக்கா, சிரிய அரசுப் படைகள் மற்றும் ரஷ்யப் படைகள் போர் குற்றம் புரிவதாக ஐக்கிய நாடுகளின் விசாரணைக் குழு மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது.
சிரியாவில் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி முதல் செப்டம்பர் 10 ஆம் தேதி வரை போர் நிறுத்தம் அறிவித்திருத்த நிலையில் அந்நாட்டின் வடகிழக்கில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் செவ்வாய்க்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் பலர் இறந்திருக்கலாம் என்ற செய்தி வெளியாகியது.
இந்நிலையில் சிரியாவில் அமெரிக்கா சமீபத்தில் நடத்திய தாக்குதலிலும் பொதுமக்கள் மற்றும் பல கால்நடைகள் இறந்ததாக ஐக்கிய நாடுகளின் விசாரணைக் குழு கூறியுள்ளது.
மேலும் சிரியாவில் தொடர்ந்து ரஷ்யா மற்றும் சிரிய அரசுப் படைகள் பள்ளிகள், மருத்துவமனைகள் என அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி போர் குற்றங்கள் புரிவதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.
ஆறு ஆண்டுகளாக தொடரும் உள்நாட்டுப் போர்
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதில் ஆசாத்துக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது. ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன.
இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள கடைசி இடமான இட்லிப் மாகாணத்தில் இறுதிச்சண்டை நடந்து வருகிறது. இந்த உள்நாட்டுப் போரில் இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் வேறு நாட்டுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.
சிரியாவில் நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர ஐக்கிய நாடுகள் சபை, வளர்ந்த நாடுகளைத் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.