

இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைக்க ஆயிரக்கணக்கான மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இந்தோனேசியாவில் மழைக் காடுகள் அமைந்துள்ள சுமத்ரா மற்றும் போர்னியோவில் கடந்த சில நாட்களாக கடுமையான காட்டுத் தீ நிலவுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் கடுமையான காற்று மாசு நீடிக்கிறது. இதன் காரணமாக உடல்நிலை பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.
காற்று மாசு காரணமாக 400 பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. 10 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் காற்று மாசு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். வான்வழிப் பயணங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்று இந்தோனேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஒருமாதமாக நிகழும் காட்டுத் தீயை அணைக்க சுமார் 9,000 ராணுவ வீரர்களை இந்தோனேசியா அனுப்பியுள்ளது. சுமார் 239 மில்லியன் தண்ணீர் இதுவரை காட்டுத் தீயை அணைக்க பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் இதுவரை 5,062 தீ ஏற்படும் பகுதிகள் கண்டறிப்பட்டுள்ளன என்றும் பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தோனேசிய காட்டுத் தீயை அணைக்க சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் சுமத்ராவில் பேகன்பர் நகரில் ஆளுநர் அலுவலகத்துக்கு வெளியே பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அந்நகரின் துணை ஆளுநர் கூறும்போது, ''நாங்கள் எங்களால் முடித்த அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறோம். தற்போது அல்லாவிடம் மழை வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளோம்” என்றார்.
இந்தோனேசியாவின் பிற இடங்களில் காட்டுத் தீயை அணைக்க மக்கள் மழை வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.