

பெங்களூரில் குண்டும் குழியுமான சாலையில் விண்வெளி வீரர் ஒருவர் நடந்துசென்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இதனைத் தொடர்ந்து மெக்ஸிகோவிலும் சாலையைச் சரிசெய்ய இந்த யோசனையைப் பயன்படுத்தியுள்ளனர்.
பெங்களூருவைச் சேர்ந்த பிரபல ஓவியர் பாதல் நஞ்சுண்டசாமி. இவர் சமூகப் பிரச்சினைகளைத் தன்னுடைய ஓவியங்களின் மூலம் தொடர்ந்து பிரதிபலித்து வருகிறார்.
இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப். 1) அன்று தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவேற்றம் செய்திருந்தார். அந்த வீடியோவில் விண்வெளி வீரர் ஒருவர் நிலவில் குண்டும் குழியுமான நிலத்தில் நடந்து சென்றதைப் போல் இருந்தது. அப்போது திடீரென கார்கள் அவரைக் கடந்து சென்றன. பின்புதான் பார்வையாளர்களுக்குப் புரிந்தது, அது நிலவு அல்ல பெங்களூருவின் மோசமான சாலைகள் என்று.
எந்தவித செயற்கை வெளிச்சங்களும் இல்லாமல் வெறும் செல்போன் கேமராவில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி லட்சக் கணக்கானோரால் பகிரப்பட்டது.
பெங்களூருவில் சாலை பிரச்சினைகள் அதிகமாக உள்ளன. அவற்றைச் சரி செய்யும் பணியும் மிகவும் மெதுவாக நடக்கிறது. கடந்த சிலமுறை வேகமாக செய்ததைப் போல இந்த முறையும் செய்வார்கள் என்று நம்புகிறேன் என்று அந்த வீடியோ எடுத்ததற்கான காரணத்தை பாதல் நஞ்சுண்டசாமி தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட சாலையைச் சரி செய்யும் பணியில் அதிகாரிகள் இறங்கினர். இந்நிலையில் இதே யோசனையை மெக்ஸிகோவில் உள்ள ஒரு சாலையைச் சரி செய்ய அமைப்பு ஒன்று பயன்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வீடியோவையும் வெளியிட்டுள்ளது.
அதில் பெங்களூரில் சாலையைச் சரிசெய்தது போலவே, மெக்ஸிகோவில் உள்ள பாசுகா நகரில் குழிகள் நிறைந்த சாலையில் விண்வெளி வீரர் ஆடை அணிந்த ஒருவர் நடந்து செல்கிறார்.
இந்த வீடியோ boveda_celeste என்ற பக்கம் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது. அந்த வீடியோவின் முடிவில் பாதல் நஞ்சுண்டசாமிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டிருந்தது.