

அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டு 18 ஆண்டுகள் உருண்டோடியுள்ளன.
உலகையே திரும்பிப் பார்க்க வைத்த இந்தத் தீவிரவாதத் தாக்குதல்தான் அமெரிக்காவில் தீவிரவாதத் தாக்குதல் நடைபெற ஆரம்பப் புள்ளி ஆனது. அத்துடன் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக பாகிஸ்தான் பக்கம் அந்நாட்டின் கவனம் செல்லவும் வழிவகுத்தது.
2001 ஆம் ஆண்டு அப்போது அமெரிக்காவின் அதிபராக இருந்த ஜார்ஜ் டபுள்யு புஷ் ஆட்சிக் காலத்தில் செப்டம்பர் 11-ம் தேதி, அல்கொய்தா தீவிரவாதிகள் விமானங்களைக் கடத்தி நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரக் கட்டிடத்தின் மீது மோதி வெடிக்கச் செய்தனர். இரட்டை கோபுரம் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டதில் அப்பாவி மக்கள் 2,996 பேர் கொல்லப்பட்டனர். அதில் 117 பேர் இந்தியர்கள். தாக்குதலுக்கு உள்ளான இரட்டை கோபுரம், நியூயார்க் மற்றும் நியூஜெர்ஸி துறைமுக கழகத்திற்குச் சொந்தமானது.
இந்தத் தாக்குலுக்கு அல்கொய்தா அமைப்பு பொறுப்பேற்றது. இந்நிலையில் அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட 18-வது நினைவுதினம் இன்று (புதன்கிழமை) அனுசரிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ஆசியாவில் தீவிரவாதத் தடுப்பு நடவடிக்கைகளில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியது. குறிப்பாக ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் அல்கொய்தா தீவிரவாதிகள் மற்றும் தலிபான்களுக்கு எதிராக களத்தில் அமெரிக்கப் படைகள் இறங்கின.
அதன்பின்னர் நடத்தப்பட்ட தீவிரத் தேடுதல் வேட்டையில் அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆட்சிக் காலத்தில் பாகிஸ்தானில் கொல்லப்பட்டார்.
21 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரும் தீவிரவாதத் தாக்குதலை வரிசைப்படுத்தினால் அதில் நிச்சயம் அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தாக்குதலுக்கு முதன்மையான இடமுண்டு. ஏனெனில் அத்தகைய தீராத காயங்களை அமெரிக்க மக்களிடம் இரட்டை கோபுரத் தாக்குதல் ஏற்படுத்தியது. 18 ஆண்டுகள் தவறாது அப்பகுதியில் நினைவு நாளில் மலரஞ்சலி செலுத்தும் அம்மக்களே இதற்கு சான்று.