Published : 11 Sep 2019 10:53 AM
Last Updated : 11 Sep 2019 10:53 AM

காஷ்மீரில் மனித உரிமை மீறல்; சர்வதேச விசாரணை தேவை: பாக். கோரிக்கையை நிராகரித்த இந்தியா

ஜெனிவா,

ஜம்மு காஷ்மீரில் பல்வேறு மனித உரிமை மீறல்கள் நடப்பதாகக் கூறி அங்கு சர்வதேச விசாரணை தேவை என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை இந்தியா நிராகரித்தது.

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 42-வது கூட்டம் நடந்து வருகிறது. இதில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி , "காஷ்மீரில் நடக்கும் மனித உரிமைகள் குறித்து சர்வதேச அளவில் விசாரணை நடத்துவது அவசியம்" என்று வலியுறுத்திப் பேசினார்.

அப்போது அதற்கு பதிலடி கொடுத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் முதன்மைச்செயலாளர் விம்மார்ஷ் ஆர்யன் பேசியதாவது:

''ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த இந்திய அரசியலமைப்பின் 370-வது பிரிவு என்பது தற்காலிகமானது. சமீபத்தில் அந்தப் பிரிவை இந்திய அரசு திரும்பப் பெற்று திருத்தம் செய்தது எங்களின் இறையாண்மைக்கு உட்பட்டது, எங்களின் உரிமை. இது முழுமையாக இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்.

அதேசமயம், மிகை உணர்ச்சியால் தவறான விவரங்களைக் கூறி, அரசியல் செய்ய பாகிஸ்தான் விடும் அறிக்கைகளைப் பார்த்து நாங்கள் வியப்படையவில்லை.

நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும், தீவிரவாதத்தைத் தூண்டுவதற்கு எதிராக சிலருக்கு அமைந்துவிட்டது. இனிமேல் எல்லை தாண்டிய தீவிரவாதத்தைத் தூண்டிவிட தடை ஏற்பட்டுள்ளதே என்று பாகிஸ்தான் கருதுகிறது.

ஜம்மு காஷ்மீரில் வன்முறையைப் பரப்பும் நோக்கில் புனிதப் போர் குறித்து சில பாகிஸ்தான் தலைவர்கள் பேசுகிறார்கள். சில மூன்றாம் நாடுகள், காஷ்மீரில் இன அழிப்பு நடப்பதாகக் கூறுகின்றன. ஆனால் இவை அனைத்தும் உண்மைக்கு அப்பாற்பட்டவை. காஷ்மீர் குறித்துப் பேசுவதற்கு பாகிஸ்தானுக்கு எந்தவிதமான உரிமையும் இல்லை.

மனித உரிமைகள் குறித்து ஐ.நா. ஆணையத்தில் பாகிஸ்தான் பேசுகிறது. ஆனால் உலகை பாகிஸ்தான் ஏமாற்ற முடியாது. இந்த வார்த்தை ஜாலங்கள் மூலம் சர்வதேச கவனத்தைத் திருப்பிவிட முடியாது.

பாகிஸ்தானில் இருக்கும் மதரீதியான சிறுபான்மையினர்களான சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் ஆகியோரை அழிக்க பாகிஸ்தான் முயல்கிறது’’.

இவ்வாறு ஆர்யன் தெரிவித்தார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x