Published : 11 Sep 2019 10:24 AM
Last Updated : 11 Sep 2019 10:24 AM

ஜம்மு காஷ்மீர் எங்களின் உள்நாட்டு விவகாரம்; தலையிட வேண்டாம்: ஐ.நா.வில் இந்தியா திட்டவட்டம் 

ஜெனிவா,

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு நீக்கியது என்பது உள்நாட்டு விவகாரம். இதில் எந்த நாட்டின் தலையீட்டையும் ஏற்க முடியாது என்று ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தில் இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்தது.

ஸ்விட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டம் நடந்து வருகிறது. அதில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை இந்தியா நீக்கிய விவகாரத்தையும், காஷ்மீரில் இந்தியா ராணுவம் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டிப் பேசியது.

இதற்கு பதில் அளித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செயலாளர் விஜய் தாக்கூர் சிங் பேசியதாவது:

''மற்ற நாடுகளில் மனித உரிமை மீறல்கள் குறித்துப் பேசும் நாடுகள் தங்கள் நாட்டில் என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்காக கண்ணீர் விடும் அவர்கள்தான் உண்மையில் தீவிரவாதம் உள்பட அனைத்தையும் தூண்டி விடுகிறார்கள்.

மதிப்பு மிகுந்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தை தவறாகப் பயன்படுத்தி அரசியல் நோக்கத்தோடு மனித உரிமைகள் குறித்து சிலர் பேசுகிறார்கள். இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் கூறிய அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் நாங்கள் மறுக்கிறோம்.

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும், சட்டத்துக்கு உட்பட்டு, அரசியலமைப்புக்கு கட்டுப்பட்டுத்தான் எடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவரப்பட்டு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுதான் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாங்கள் எடுத்த இந்த முடிவு இந்தியாவின் இறையாண்மை முடிவு. இந்தியாவின் சட்டத்துக்கு உட்பட்டு எடுக்கப்பட்டது. இதில் எந்த நாட்டின் தலையீட்டையும் இந்தியா விரும்பவில்லை. காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீக்கப்பட்டு வருகின்றன. ஜனநாயக முறைப்படிதான் அனைத்தும் நடக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மக்களின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, எல்லை தாண்டிய தீவிரவாதம் ஆகியவற்றுக்காகத்தான் பல்வேறு பாதுகாப்பு கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் வகுத்துள்ளோம். இவை அனைத்தும் தற்காலிகமானதுதான்.

தீவிரவாதம் இன்று மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளளது, அதிலிருந்து மக்களின் உரிமைகளையும், உயிரையும் பாதுகாப்பது பெரும் சவாலாக உலக அளவில் இருந்து வருகிறது''.

இவ்வாறு விஜய் தாக்கூர் சிங் பேசினார்.

அப்போது மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் மிச்சேல் பேச்சலேட் கூறுகையில், "ஜம்மு காஷ்மீர் தொடர்பாக இந்தியா சமீபத்தில் எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டுதான் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், காஷ்மீரில் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் ஆழ்ந்த கவலை அளிக்கிறது. ஆதலால், அங்கு விரைவில் இயல்பான சூழல் நிலவவும், அடிப்படை வசதிகள், சேவைகள் மக்களுக்கு கிடைக்கவும் இந்தியா உறுதி செய்ய வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x