Published : 11 Sep 2019 07:31 AM
Last Updated : 11 Sep 2019 07:31 AM

ஆப்கானிஸ்தான் - தயாராகிவிட்டது தலிபான்

டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி

அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ம் தேதி தீவிரவாதத் தாக்குதல் நடந்தது. இன்றோடு 18 ஆண்டுகள் முடிந்துவிட்டது. இனி இப்படியெல்லாம் நடக்காது என எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கும்போது, ஆப் கானிஸ்தான், பாகிஸ்தானில் நடக்கும் சம்பவங் களைப் பார்த்து, உலக நாடுகள் மீண்டும் கவலைப்பட ஆரம்பித்துள்ளன. செப்டம்பர் 11 தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானில் செயல்பட்ட அல்காய்தா தீவிரவாத அமைப்புதான் காரணம் என்பதையும் நியூயார்க், வர்ஜீனியா, பென்சில் வேனியா மாகாணங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த காலீத் ஷேக் முகமதுதான் காரணம் என்பதையும் உலக நாடுகள் அறியும். இப்போது இந்த தீவிரவாதி காலீத் அமெரிக்காவில் வழக்கை சந்திக்க இருக்கிறான்.

2020-ல் நடக்க இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்குள் ஆப்கானிஸ்தானில் உள்ள தனது ராணுவ வீரர்களை திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும் என்று ட்ரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால் ஆப்கானிஸ்தானை தங்கத் தாம்பாளத்தில் வைத்து தலிபான் தீவிரவாதிகளிடமும் அவர்களால் பயனடையப்போகும் பாகிஸ் தானிடமும் ஒப்படைக்கப் போகிறது.

ஆப்கான் மீண்டும் கற்காலத்துக்குப் போகப் போகிறது. அதோடு, இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பிறகு அதிபராக இருந்த புஷ் நிர்வாகத்தால் அழித்து ஒழிக்கப்பட்ட தீவிரவாத அமைப்புகள் அனைத்தும் புத்துயிர் பெற்று, மீண்டும் ஆட்டம் போட ஆரம்பிக்கும் என அரசியல் நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் சகல வசதிகளுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தலிபான் தீவிரவாதிகள், நேட்டோ படைகளையும் அமெரிக்க படைகளையும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தாக்கி வருகிறார்கள். இதை ட்ரம்ப் நிர்வாகமும் அவர்களின் ஆதரவாளர்களும் மறந்துவிட்டார்கள். அவர்களின் நோக்கமெல்லாம் 2016-ம் ஆண்டு தேர்தலின்போது, அமெரிக்க படை கள் ஆப்கனில் இருந்து வாபஸ் பெறப் படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறை வேற்றுவதில்தான் இருக்கிறது.

ஆப்கானிஸ்தான் குறித்து ஒன்றுக்கு ஒன்று முரணான பல கருத்துகளையும் குழப்பம் தரும் கருத்துகளையும் ட்ரம்ப் கூறியிருக்கிறார். தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தில் நடப்பதால், வீரர்களை திரும்ப அழைத்துக் கொள்வதில் தீவிரமாக இருக்கிறார். அவசர அவசரமாக திரும்ப அழைப்பதால் அமெரிக்காவுக்குத்தான் ஆபத்தாக முடியும் என விமர்சனம் எழுந்துள்ளதால், 8 ஆயிரம் வீரர்கள் தொடர்ந்து ஆப்கனில் இருப்பார்கள் என்றும் தலிபான் அமைப்புடன் ஏற்படுத்திக் கொண்ட அமைதி ஒப்பந்தத்தை அவர்கள் செயல்படுத்துவார்கள் என்றும் ட்ரம்ப் கூறியிருக்கிறார்.

ஆனால் கடந்த வாரம் அமெரிக்க, நேட்டோ படைகளைக் குறிவைத்து நடந்த கார் வெடிகுண்டுத் தாக்குதல்களை அடுத்து, அமெரிக்க அதிபரின் சிறப்புத் தூதர் ஷால்மே கலீல்ஸாத்தின் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திட அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ மறுத்துவிட்டார். அமெரிக்க நிர்வாகத்துக்கும் தலிபானுக்கும் இடையே என்ன மாதிரியான ஒப்பந்தம் உருவாகியிருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. ஆப்கனில் ஆட்சியில் இருக்கும் அரசுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.

பாம்பியோவுக்கு நன்றாகவே தெரியும். அவர் அரசியல்வாதி மட்டுமல்ல, சிஐஏ உளவு அமைப்பின் தலைவராக இருந்தவர். கடந்த 1996-ம் ஆண்டே தலிபான்கள் தங்களின் இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கானிஸ்தானுக்கு பாம்பியோ ஒப்புதல் வழங்க வேண்டும் என விரும்பியபோது, அதை மறுத்துவிட்டார். அரசியல் அங்கீகாரம் மட்டுமல்லாது அதைவிட அதிகமாக தலிபான் கள் எதிர்பார்ப்பதை அறிந்த பாம்பியோ, அனைத்து தரப்பினரும் சம்மதித்தால் மட்டும் தான் ஏற்றுக் கொள்ள முடியும் எனக் கூறிவிட்டார். இதை ட்ரம்பின் வலதுசாரி ஆதர வாளர்கள் விரும்பவில்லை.

பாம்பியோ துரோகம் செய்துவிட்டதாக நினைக்கின்றனர். இதுகுறித்து ட்ரம்ப் இதுவரை கருத்துத் தெரிவிக்கவில்லை. விரைவில் பாம்பியோ வெளியேற்றப்படலாம். அல்லது அவரே ராஜினாமா செய்துவிட்டுப் போகவும் வாய்ப்பு இருக்கிறது.

தலிபான்கள் இப்போதே கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள். பாகிஸ்தான் அரசியல்வாதிகளும் உற்சாகமாகிவிட்டார்கள். ஒப்பந்தத்தை மீறினால், தலிபான் அமைப்பு மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இதில் பிரச்சினை என்னவென்றால், என்ன மாதிரியான ஒப்பந்தம், யாரெல்லாம் அதில் கையெழுத்திட்டுள்ளனர் என யாருக்கும் தெரியவில்லை.

தலிபான்களுக்கு புகலிடம் கொடுத்தது, அவர்கள் ஆப்கன் அரசியலில் மீண்டும் தலையெடுத்தது, ஒசாமா பின் லேடன் போன்ற பயங்கர தீவிரவாதிகளை பத்திரமாக பாதுகாத்து வைத்தது என அனைத்து காரியங்களிலும் பாகிஸ்தானுக்கு பங்கு இருந்ததை ஒரு சிலரைத் தவிர யாருமே கண்டுகொள்ளவில்லை என்பதுதான் துயர மான விஷயம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x