Published : 10 Sep 2019 03:03 PM
Last Updated : 10 Sep 2019 03:03 PM

காஷ்மீர் தொடர்பாக சீனா - பாகிஸ்தான் கூட்டறிக்கை: இந்தியா எதிர்ப்பு

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சீனா - பாகிஸ்தானின் சமீபத்திய கூட்டறிக்கையை இந்தியா எதிர்த்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மத்திய அரசு, அரசியலமைப்பின் 370-வது பிரிவைத் திரும்பப் பெற்றது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை லடாக், ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது.

இந்திய அரசின் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தியாவுடன் வர்த்தக உறவு, ரயில், பஸ் போக்குவரத்தையும் ரத்து செய்தது. சர்வதேச அளவில் காஷ்மீர் விவகாரத்தைக் கொண்டு சென்று வருகிறது. மேலும், செப்டம்பர் மாதம் ஐ.நா.வில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினையை பிரதானமாக எழுப்ப பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி பாகிஸ்தானுடன் இணைந்து கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ''பாகிஸ்தானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டைக் காக்க சீனா நிச்சயம் ஆதரவாக இருக்கும். மேலும் பரஸ்பர மரியாதை மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் இரு நாடுகளும் காஷ்மீர் தொடர்பான பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் காஷ்மீர் தொடர்பான சீனா - பாகிஸ்தான் வெளியிட்ட கூட்டறிக்கையை இந்தியா எதிர்த்துள்ளது.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவிஷ் குமார் கூறும்போது, “ சீனா -பாகிஸ்தான் கூட்டறிக்கையில் காஷ்மீர் தொடர்பாகக் குறிப்பிட்டுள்ளதை நாங்கள் முற்றிலுமாக நிராகரிக்கிறோம். காஷ்மீர் இந்தியாவின் ஒருபகுதி” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், “காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா- பாகிஸ்தானுக்கு உதவி தேவை என்றால் அவர்களுக்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம். அவர்களுக்கு இது நன்கு தெரியும். தற்போது இந்தியா- பாகிஸ்தான் இடையே எல்லையில் இரு வாரங்களுக்கு முன் இருந்த நிலை இல்லை. இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் சற்று தணிந்துள்ளது” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x