Published : 10 Sep 2019 01:44 PM
Last Updated : 10 Sep 2019 01:44 PM

அமெரிக்கா பேச்சுவார்த்தையை ரத்து செய்த நிலையில் தலிபான்களுக்கு அழைப்பு விடுத்த ஆப்கன் அதிபர்

அமெரிக்கா ஏற்பாடு செய்திருந்த பேச்சுவார்த்தை ரத்தான நிலையில், தலிபான்களுடனான பேச்சுவார்த்தைக்கு ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானி அழைப்பு விடுத்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு அமைதியான தீர்வு காண்பதில், தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் முயற்சிகள் நடக்கின்றன. மேலும் ஆப்கனில் 18 ஆண்டுகளாக நடந்து வரும் போரிலிருந்து தன்னை விடுத்துவித்துக் கொள்ள அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

இதனை மையமாகக் கொண்டு ஆப்கன் அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பாக 9 சுற்றுகள் அமெரிக்கா தலைமையில் நடந்தது. இதன் அடிப்படையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தலிபான்கள் தரப்பு ஏற்றுக்கொண்ட நிலையில், இது தொடர்பான முன்னெடுப்புக்காக அமெரிக்கப் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த அமெரிக்கப் பிரதிநிதிகள் 17 பேர் பாகிஸ்தான் வந்தனர்.

இந்நிலையில் ஆப்கனில் தலிபான்கள் நடத்திய தீவிரவாதத் தாக்குதலில் அமெரிக்கப் படை வீரர்கள் கொல்லப்பட்டதற்கு தலிபான்கள் பொறுப்பேற்றனர். இதனைத் தொடர்ந்து தலிபான்களுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக ட்ரம்ப் அறிவித்தார்.

பேச்சுவார்த்தையை அமெரிக்கா ரத்து செய்தை தலிபான்கள் கடுமையாக விமர்சித்த நிலையில், தலிபான்களை ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.

இதுகுறித்து அஷ்ரப் கானி கூறும்போது, “தலிபான்களுடன் பேச்சுவார்த்தைக்கு எந்த நிபந்தனையும் இல்லை. நாங்கள் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயாராகவே இருக்கிறோம். ஆனால், தலிபான்கள் எங்களை அச்சுறுத்த விரும்பினால் எங்களிடம் உள்ள படைகளைப் பாருங்கள்” என்றார்.

பேச்சுவார்த்தைக்கு முன்னர் தலிபான்கள் தரப்பு தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று என்ற கோரிக்கையை அஷ்ரப் கானி வைத்துள்ளார்.

மேலும், தலிபன்களின் தலைவர் ஹிபாதுல்லாவை வீடியோ மூலம் ஆலோசனைக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் ஆப்கன் அரசு அமெரிக்காவின் கைப்பாவை செயல்படுகிறது என்று தலிபான்கள் விமர்சித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x