

வாஷிங்டன்,
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையே மீண்டும் சமரசப் பேச்சு நடத்துவதற்குத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் பிரச்சினை இந்தியா -பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினை என்று பலமுறை இந்தியா உலக நாடுகளுக்குத் தெரிவித்துவிட்டது. உலக நாடுகளும் இந்தியாவின் கருத்தை ஆதரித்துள்ளன. அப்படி இருந்தும் மீண்டும் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று அதிபர் ட்ரம்ப் பேசியுள்ளார்.
சமீபத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்த ஜி7 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பைச் சந்தித்துப் பேசினார். அப்போது, காஷ்மீர் விவகாரம் குறித்துப் பேசிய பிரதமர் மோடி, காஷ்மீர் விவகாரம் இரு நாடுகள் தொடர்புடைய விவகாரம் என்று அழுத்தமாகக் குறிப்பிட்டார். அதை அதிபர் ட்ரம்ப்பும் ஏற்றுக்கொண்டார்.
ஏற்கெனவே காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று அதிபர் ட்ரம்ப் இருமுறை கூறியதற்கு இந்தியா மறுத்து அறிக்கை வெளியிட்டு இருந்தது. இந்த சூழலில் அதிபர் ட்ரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், " காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா- பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருக்கிறேன். இரு நாடுகளும் விரும்பினால் நான் பேசத் தயார்.
இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்த இரு வாரங்களுக்கு முன் இருந்த பதற்றம் இப்போது சற்று தணிந்துள்ளது. இரு நாடுகளுடனும் நான் நட்புறவோடுதான் இருக்கிறேன்" எனத் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அரசியலமைப்பின் 370-வது பிரிவையும் ரத்து செய்தது. மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து அறிவித்தது. இந்தச் சம்பவத்துக்குப் பின் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான நட்புறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில் காஷ்மீர் விவகாரத்தைக் கொண்டு செல்ல பாகிஸ்தான் முயல்கிறது.
ஐஏஎன்எஸ்