மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் இருவேறு தாக்குதல்கள்: 29 பேர் பலி
வாகடூகோ
ஜிகாதி கிளர்ச்சியாளர்களின் வன்முறை அதிகரித்து வரும் மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா ஃபாசோவில் நடந்த இருவேறு தாக்குதல்களில் நேற்று 29 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரெஞ்சு காலனியான புர்கினா ஃபாசோ, உலகின் ஏழ்மையான நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ள நாடாகும். இந்நாட்டில் கடந்த 2015 முதல் இஸ்லாமிய போராளிகள் கிளர்ச்சி செய்து வருகின்றனர்.
2015க்கு முன் எந்தவித வன்முறையும் இல்லாதிருந்த இந்த நாட்டில் மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் வடக்குப் பகுதியில் தொடங்கிய ஜிகாதிகளின் கிளர்ச்சி வேகமாக கிழக்கை நோக்கி அண்டை நாடான புர்கினா ஃபாசோவிற்கும் வந்தடைந்தது.
நேற்று நடைபெற்ற தாக்குதல் குறித்து அரசு செய்தித் தொடர்பாளர் ரெமிஸ் ஃபுல்கன்ஸ் டான்ட்ஜினோ கூறியுள்ளதாவது:
''பார்சலோகோ நகரிலிருந்து வர்த்தகர்கள் சிலர் வியாபாரத்திற்காக சரக்குகளை வாங்கி எடுத்துக்கொண்டு தங்கள் சொந்த கிராமங்களை நோக்கி ஒரு வாகனத்தில் புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அவர்களைக் குறிவைத்து ஐஈடி வெடிகுண்டு வீசப்பட்டது. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் 15 பயணிகள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.
இதற்கிடையில் அங்கிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் இன்னொரு சம்பவம் நடந்துள்ளது. இதில் ராணுவத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்துவரும் சண்டையால் இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு கொண்டு சென்ற வாகனங்கள் தாக்கப்பட்டன. இதில் 14 பேர் பலியாகினர். இறந்தவர்களில் பலர் வாகன ஓட்டுநர்கள்.
இந்தத் தாக்குதல் சம்பவங்களுக்குப் பிறகு பிரச்சினைக்குரிய பகுதிகளில் ராணுவம் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.
ஜிகாதி கிளர்ச்சியாளர்களால் நாட்டில் தற்போது இங்கும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலை தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. பாதுகாப்பு நிலைமை குறித்து விவாதிக்க பிராந்திய நாட்டுத் தலைவர்களின் உச்சி மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாநாடு, வரும் சனிக்கிழமை நாட்டின் தலைநகர் வாகடூகோவில் நடைபெற உள்ள நிலையில் பொதுமக்கள் மீது ஜிகாதி கிளர்ச்சியாளர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்''.
இவ்வாறு அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
