

ஸ்ரீநகர்,
அப்பாவி காஷ்மீரிக்களின் பிரச்சினையைப் பற்றி ஐ.நா., ஐ.நா.வில் பேசவுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி கூறியுள்ளார்.
ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலின் 42-வது கூட்டம் நடைபெறுகிறது.
இதில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி 3 நாள் பயணமாக ஜெனீவா புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக இஸ்லாமாபாத்தில் காஷ்மீர் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், சர்வதேச பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் அப்பாவி காஷ்மீரிக்களின் நிலை பற்றி எடுத்துரைப்பேன் எனப் பேசியுள்ளார். இது ரேடியோ பாகிஸ்தானில் ஒளிபரப்பாகியுள்ளது.
ஐ.நா.,வின் 42-வது மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் மியான்மார், ஜம்மு - காஷ்மீர், ஏமன், உக்ரைன், லிபியா, சோமாலியா, சூடான், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, ஜார்ஜியா உள்ளிட்டப் பகுதிகளைச் சேர்ந்த 25 நிபுணர்கள் தாக்கல் செய்யும் 90 அறிக்கைகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
காஷ்மீர் ஏன்?
கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு ரத்து செய்தது. ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் அங்கு இன்னும் பல்வேறு பகுதிகளில் ராணுவக் கெடுபிடிகள் நிலவுகிறது. காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் மெஹபூபா முப்தி, ஒமர் அப்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தை ஆரம்பத்திலிருந்தே பாகிஸ்தான் எதிர்த்து வருகிறது. பாதுகாப்புக் காரணங்களுக்காக குவிக்கப்பட்டுள்ள படைகளை மத்திய அரசின் அத்துமீறல் எனக் கூறி பாகிஸ்தான் எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
சர்வதேச அரங்கில் பாகிஸ்தானுக்கு காஷ்மீர் விவகாரத்தில் பெரியளவில் ஆதரவு கிட்டாத நிலையில் ஐ.நா.வில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பவிருப்பதாக ஷா முகமது குரேஷி கூறியிருக்கிறார்.
-ஏஎன்ஐ