

நியூயார்க்,
அமெரிக்காவில் வரும் 27-ம் தேதி நடைபெறும் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டம் செப்டம்பர் 27-ம் தேதி நடைபெறுகிறது. இந்தக் கூட்டம் செப்டம்பர் 24-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. 112 நாடுகளின் தலைவர்கள், 48 நாடுகளின் பிரதமர்கள், 30 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 24-ம் தேதி நடைபெறும் முதல்நாள் கூட்டத்தில் உரையாற்றுகிறார். பிரதமர் மோடி 27-ம் தேதி பேசுகிறார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்டோரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்.
ஐ.நா. கூட்டத்தில் கலந்துகொள்ள வருகை தரும் பிரதமர் மோடி நியூயார்க் நகரில் ஒரு வாரகாலம் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். பில்கேட்ஸ் பவுண்டேஷன் உட்பட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரையாற்றுகிறார். பில்கேட்ஸ் பவுண்டேஷனின் குளோபல் கோல் கீப்பர் விருதையும் பிரதமர் மோடி பெறுகிறார். சுத்தமான இந்தியா இயக்கத்தைத் தொடங்கியதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
புளூம்பெர்க் குளோபல் பிசினஸ் அமைப்பு நிகழச்சியிலும் மோடி பங்கேற்கிறார். மேலும் காந்தி அமைதி தோட்டத்தை அவர் திறந்து வைக்கிறார். முன்னதாக, ஹூஸ்டன் நகரில் செப்டம்பர் 22-ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறும் அமெரிக்க இந்தியர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் பங்கேற்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்க வாழ் இந்தியர்கள் பல ஆயிரம் பேர் இதுவரை பதிவு செய்துள்ளனர்.