காஷ்மீர் மோதலுக்கு இடையே மசூத் அசாரை விடுதலை செய்த பாகிஸ்தான்?

காஷ்மீர் மோதலுக்கு இடையே மசூத் அசாரை விடுதலை செய்த பாகிஸ்தான்?
Updated on
1 min read

ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவரும் மும்பை தாக்குதலுக்குக் காரணமாக இருந்தவருமான மசூத் அசாரை பாகிஸ்தான் விடுதலை செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது தீவரவாத அமைப்பு, இந்தியாவில் பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேசத் தீவிரவாதியாக அறிவிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 4 நிரந்த உறுப்பு நாடுகள் ஆதரவு அளித்த போதிலும் சீனா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்து வந்தது. இந்நிலையில், சீனாவும் ஆதரவு அளித்ததையடுத்து, மசூத் அசாரை சர்வதேசத் தீவிரவாதியாக அறிவிக்கும் தீர்மானம் மே மாதம் ஐ.நா. தடைக் குழு கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேறியது.

மசூத் அசாரின் அமைப்புக்கு நிதி உதவி செய்வது, ஆதரவு அளிப்பது தடை செய்யப்பட்டது. வெளிநாடுகளில் இருக்கும் அவரின் சொத்துகளை முடக்கவும் ஐ.நா.பரிந்துரைத்தது. இதனைத் தொடர்ந்து மசூத் அசார் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

மேலும், இந்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டத்தின்படி ஜெய்ஷ் இ முகமது தலைவர் மசூத் அசார், லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவர் ஹபிஸ் முகமது சயீத் ஆகியோர் அமைப்பு சாரா தனித் தீவிரவாதிகள் என்று மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்தது. இந்நிலையில் பாகிஸ்தானால் மசூத் அசார் விடுதலை செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் ஜம்மு - ராஜஸ்தான் எல்லையிலும் படைகளை பாகிஸ்தான் அதிகரித்துள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே காஷ்மீர் விவகாரத்தில் மோதல் வலுத்து வரும் நிலையில் மசூத் அசாரை பாகிஸ்தான் விடுதலை செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in