

பாகிஸ்தான் ஏற்பாடு செய்திருந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதை, அந்நாட்டு நெட்டிசன்கள் பலர் கடுமையாக விமர்சித்தனர்.
பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பாகிஸ்தானின் கடன் சுமை 6 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 30 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. வெறும் 4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கூட வரி வசூல் ஆவதில்லை என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கான் பதவி ஏற்றது முதல் பொருளாதாரத்தைச் சீர்படுத்த ஏராளமான சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறார். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு இருந்த ஏராளமான சொகுசுக் கார்களை ஏலம் விட்டார், வீடுகளை ஏலம் விட்டார். அதிகாரிகளுக்குச் சலுகைகளை குறைத்தார். இவ்வாறு பல சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் அசிர்பைஜான் நாட்டின் தலைநகரான பகுவில் செப்டம்பர் 4 முதல் 8 ஆம் தேதி வரை பெஷாவரில் உள்ள பாகிஸ்தானின் வணிக நிறுவனம் ஒன்று முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் ஏராளமான வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வுக்கு வந்ந்த விருந்தினர்களைக் கவர நடன நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தது தற்போது சர்ச்சையாகியுள்ளது.
பாகிஸ்தானியர்கள் பலரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் நடத்தப்பட்ட பெல்லி டான்ஸ் உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகளை கடுமையாக விமர்சித்து ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டனர்.