Published : 09 Sep 2019 09:40 AM
Last Updated : 09 Sep 2019 09:40 AM

பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல்

டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி

காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்துக்கான 370-வது சட்டப் பிரிவை மத்திய அரசு நீக்கிய கடந்த 4 வாரமாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தனது அமைச்சரவையிலும் வெளியிலும் அணு ஆயுதப் போர் ஏற்படும் என மிரட்டி வருகிறார். காஷ்மீர் பிரச்சினையால் ஏற்படும் அணு ஆயுதப் போரால், சர்வதேச அளவில் பாதிப்புகள் ஏற்படும் என்றும் கூறி வருகிறார். தனது கருத்துகளை அவர் `தி நியூயார்க் டைம்ஸ்' நாளிதழில் கட்டுரையாக எழுதியிருக்கிறார். `காஷ்மீர் மீதும் அதன் மக்கள் மீதும் இந்தியா நடத்தி வரும் தாக்குதல்களை உலக நாடுகள் தடுக்காவிட்டால், அணு ஆயுதங்களை வைத்திருக்கும் இரண்டு நாடுகளும் ராணுவ ரீதியாக மோதலை சந்திருக்க வேண்டியிருக்கும்' என அதில் கூறியிருக்கிறார்.

இம்ரான் கானின் இந்த கருத்துகள் எல்லோரும் எதிர்பார்த்த ஒன்றுதான். இதன் காரணமாக, உலக நாடுகளின் தலைவர்களுக்கோ, மோடி தலைமையிலான இந்திய அரசுக்கோ ஆச்சரியம் இல்லை. தான் மட்டும்தான் அமைதிக்கான முயற்சியை தொடர்ந்து எடுத்து வருவதாகவும் இந்தியா அதைப் புறக்கணித்து வருவதாகவும் கூறி வருகிறார் இம்ரான். தீவிரவாதத்தைக் காரணம் காட்டி, பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி ஐ.நா. சபையின் நிதி நடவடிக்கை பணிக் குழுவை இந்தியா வலியுறுத்தி வருவதாகவும் அவர் புகார் கூறியிருக்கிறார். குறிப்பிட்டு எந்த நாட்டையும் சொல்லாமல், பல நாடுகள் இந்தியாவுடன் வர்த்தகரீதியாக நெருங்கி வருவதாகவும் கூறியிருக்கிறார். `வர்த்தக லாபத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் அதையும் தாண்டி, உலக நாடுகள் செயல்பட வேண்டும். இரண்டாம் உலகப் போர் ஏற்பட்டதற்கு காரணமே, ஜெர்மனிக்கு ஆதரவான முனீச் ஒப்பந்தம்தான். இதே போன்ற அச்சுறுத்தல், இப்போதும் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த முறை, அணு ஆயுத பின்னணியில்.. ' என்றும் அவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

காஷ்மீர் தொடர்பான இம்ரான் கானின் மிரட்டல்கள், விரக்தியில் அவர் பேசிய பேச்சுகள் மற்றும் அவரது அமைச்சர்களின் கருத்துகளை உலக நாடுகள் அனைத்தும் புறந்தள்ளிவிட்டன. காஷ்மீர் விஷயத்தில் அவரது நிலையை யாரும் ஆதரிக்கவில்லை. சீனா மட்டும்தான் எப்போதும் போல அதற்கு ஆதரவாக இருக்கிறது. இருதரப்பு பிரச்சினையை சர்வதேச பிரச்சினையாக மாற்றும் விஷயத்திலும் மூன்றாவது நாடுகளின் தலையீட்டை வலியுறுத்தும் கோரி்க்கையிலும் பாகிஸ்தான் தனித்து விடப்பட்டுள்ளது. ஒரு பக்கம் பேச்சுவார்த்தை மூலம் அமைதியைக் கொண்டு வர வேண்டும் என்றும் மறுபுறம் புனிதப் போர் என்றும், இந்தியாவுக்கு எதிரான வன்முறையை தூண்டிவிட்டும் பேசுகிறார் இம்ரான். உள்நாட்டில் இருக்கும் பிரச்சினைகளை கண்டுகொள்ளாமல் இருப்பதால் ஏற்படும் விளைவுகள் இம்ரான் அரசுக்கு தெரியாமல் இல்லை. அங்குள்ள எதிர்க்கட்சிகள், இந்தியா வசம் உள்ள காஷ்மீர் பிரச்சினைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, தன் வசம் இருக்கும் காஷ்மீர் பக்கம் திருப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.

இம்ரான் சொன்ன ஒரு விஷயம் மட்டும் இரு நாடுகளுக்கும் மிகவும் பொருத்தமாக இருக்கிறது. `இந்தியா - பாகிஸ்தான் இடையே மோசமான வரலாறு இருந்தாலும் இரு நாடுகளுமே பல விஷயங்களில் ஒரே மாதிரியான சவால்களை சந்தித்து வருகின்றன. வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், பருவநிலை மாற்றம், குறிப்பாக பனிப் பாறைகள் உருகுவது மற்றும் கோடிக்கணக்கான குடிமக்களைப் பாதிக்கும் குடிநீர் பற்றாக்குறை என பல பிரச்சினைகள் உள்ளன' என இம்ரான் கூறியிருக்கிறார். சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் அவர். ஆனால் ஏன் இன்னும் இந்த நிலை இருக்கிறது என்பதை மட்டும் விளக்கவில்லை. அதற்கான விடை மிகவும் எளிதானதுதான். உலகமே கவலையுடன் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் எல்லை தாண்டிய தீவிரவாதம் உள்ளிட்ட பல்வேறு வகையான தீவிரவாத பிரச்சினைகள் குறித்து இந்தியாவுடன் விவாதிக்க மறுப்பதுதான் அது.

பொறுப்பான எந்த தேசமும் தன்னிடம் இருக்கும் அணு ஆயுதம் பற்றி பீற்றிக் கொள்ளாது. இதுபோன்ற பொறுப்பற்ற பேச்சுகளை புத்தியில்லாத தலைவர்களிடம் இருந்துதான் கேட்க முடியும். இப்படி மிரட்டினால் மற்ற நாடுகளின் தலைவர்கள், அவர்களின் காலில் மண்டியிடுவார்கள் என நம்புகிறார்கள் அவர்கள். இம்ரானின் இந்த பொறுப்பற்ற பேச்சால், அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்துவது இல்லை என்ற கொள்கையை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதைப் பார்த்த இம்ரான், இதற்கெல்லாம் பாகிஸ்தான் பயப்படாது எனக் கூறிய மறு விநாடியே, எங்களுக்கு அதுபோன்ற கொள்கையெல்லாம் கிடையாது எனக் கூறியிருக்கிறார்.

டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி

எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியின் இதழியல் துறை பேராசிரியர் மற்றும் வாஷிங்டனில் பணியாற்றிய பத்திரிகையாளர்.

தமிழில்: எஸ்.ரவீந்திரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x