Published : 07 Sep 2019 10:40 AM
Last Updated : 07 Sep 2019 10:40 AM

சந்திரயான்-2 தரையிறங்கும்போது தகவல் துண்டிப்பு: கிண்டல் செய்த பாகிஸ்தான் அமைச்சர் - விமர்சித்த நெட்டிசன்கள்

'சந்திரயான் - 2' விண்கலத்தின், 'லேண்டர்' சாதனம், நிலவில் தரையிரங்குவதற்கு அதன் சிக்னல் துண்டிக்கப்பட்டதை பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஃபகத் உசைன் கிண்டல் செய்துள்ளார்.

'சந்திரயான் - 2' விண்கலத்தின், 'லேண்டர்' சாதனம், நிலவில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அதிலிருந்து, சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதற்கான காரணம் எதுவும் உடனடியாகத் தெரியவில்லை. இதனை இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

எனினும் இந்திய விஞ்ஞானிகளின் முயற்சியையும், இஸ்ரோ தலைவர் சிவனையும் சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டினர். இந்நிலையில் ட்விட்டரில் #INDIAFAILED என்ற ஹேஷ்டேக் பாகிஸ்தானியர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டது.

பாகிஸ்தானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஃபகத் உசைன் இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகளின் தோல்வியையும், பிரதமர் மோடியையும் கிண்டல் செய்து ட்விட்டரில் பதிவுகளை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து இந்திய நெட்டிசன்கள் பலர் உசைனை விமர்சித்துப் பதிவிட்டனர்.

இதற்கு உசைன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ சந்திரயான் - 2 தோல்விக்கு நான் தான் காரணம் என்பது போல் இந்தியர்கள் என்னை கிண்டல் செய்வதைக் கண்டு ஆச்சிரியமாக உள்ளது” என்று பதிவிட்டு 'இந்தியா தோற்றுவிட்டது' என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டார்.

இந்தியாவின் சந்திரயான்- 2

நிலவை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ‘சந்திரயான்-2’ விண்கலத்தை ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 22-ம் தேதி விண்ணில் செலுத்தியது. சந்திரயான்-2 விண்கலம் மொத்தம் 3,850 கிலோ எடை கொண்டது. இதில், தொடர்ந்து நிலவை சுற்றிவரக்கூடிய ‘ஆர்பிட்டர்’, நிலவில் இறங்கி ஆய்வு செய்யும் ‘விக்ரம்’ என்ற லேண்டர் கலம், நிலவில் ஊர்ந்து சென்று ஆய்வு செய்யக்கூடிய ‘பிரக்யான்’ என்ற ரோவர் வாகனம் என 3 அதிநவீன சாதனங்கள் உள்ளன.

சந்திரயான் விண்கலத்தின் ஆர்பிட்டர் பகுதியில் இருந்து ‘விக்ரம்’ என்ற லேண்டர் பாகம் கடந்த 2-ம் தேதி வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டது.

48 நாட்கள் பயணத்துக்குப் பிறகு, சந்திரயானின் லேண்டர் பகுதி இன்று அதிகாலை தரையிறங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இறுதிக்கட்டப் பணிகள் மிகவும் சவாலானதாக இருந்தது. வேகத்தைக் குறைத்து நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கச் செய்வது என்பது மிகவும் கடினமான பணியாக விஞ்ஞானிகள் கருதினர். லேண்டரின் வேகத்தைப் படிப்படியாகக் குறைத்து பூஜ்ய நிலைக்குக் கொண்டு வருவதுதான் இத்திட்டத்தின் சவாலான பணியாகும். அதை வெற்றிகரமாக முடித்துவிட்டால் விண்கலம் தரையிறங்குவது எளிதாகிவிடும். நிலவுக்கு அருகே லேண்டர் வந்ததும் எதிர்விசை நடைமுறையைப் பயன்படுத்தி அதன் வேகம் குறைக்கப்படும்.

தரையில் இருந்து 10 மீட்டர் உயரத்துக்கு லேண்டர் வந்ததும், அதன் வேகம் ஒரு நிமிடத்துக்கு 2 மீட்டர் என்ற அளவில் இருக்கும். இறுதியாக லேண்டரின் வேகம் பூஜ்ஜிய நிலையை எட்டியதும் நாளை அதிகாலை 1.40 மணிக்கு அதை நிலவில் தரையிறக்குவதற்கான பணிகள் தொடங்கும்.

முதலில் எங்கு தரையிறங்குவது என்பதை லேண்டரில் உள்ள சென்சார்கள் ஆராய்ந்து, சமதளப் பரப்பு உடைய இடத்தைத் தேர்வு செய்யும். பிறகு, அதிகாலை 1.55 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் ‘மான்சினஸ்-சி’ - ‘சிம்பீலியஸ்-என்’ என்ற இரு பள்ளங்களுக்கு இடையே லேண்டர் மிக மெதுவாகத் தரையிறங்கும்.

இந்த நிலையில், 'சந்திரயான் - 2' விண்கலத்தின், 'லேண்டர்' சாதனம், நிலவில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அதிலிருந்து, சிக்னல் துண்டிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x