

மறைந்த முன்னாள் ஜிம்பாப்வே அதிபர் முகாபே காலனியத்துவத்திற்கு எதிரான சாம்பியன் என்று தென் ஆப்பிரிக்க சிரில் ரமபோசா தெரிவித்துள்ளார்.
ஜிம்பாப்வே நாட்டை 37 ஆண்டுகள் ஆட்சி செய்த முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று (வெள்ளிக்கிழமை) மரணமடைந்தார்.
ராபர்ட் முகாபே மரணத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ராபர்ட் முகாபேவின் மரணம் குறித்து தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா கூறும்போது, “
காலனி ஆதிக்கத்துக்கு எதிராக ஜிம்பாப்வே அதிபர் முகாபேவின் போராட்டம் நிறவெறிக்கு எதிரான எங்களது போரட்டத்தையும் ஊக்கப்படுத்தியது. தென் ஆப்பிரிக்கா ஒரு நாள் விடுதலை பெறும் என்ற நம்பிக்கையையும் அளித்தது. முகாபே ஒரு சாம்பியன்” என்று புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.
தெற்கு ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வே கடந்த 1980-ல் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்றது. இதையடுத்து, 1980 முதல் 1987 வரையில் ராபர்ட் முகாபே (93) பிரதமராக பதவி வகித்தார். பின்னர் 1987 முதல் அதிபராக பதவி வகித்து வந்தார். உலகிலேயே மிகவும் வயதான ஆட்சியாளராக முகாபே விளங்கினார்.
இந்த நிலையில் ஜிம்பாப்வேவில் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கடந்த 2017 ஆம் ஆண்டு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. இதன்மூலம் முகாபேயின் 37 ஆண்டு கால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. முகாபே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.