

ஏமனில் நடந்து வரும்போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறும்போது, “நாங்கள் ஏமனில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டு இருகிறோம். மேலும் இரு தரப்பு கோரிக்கைகளை ஏற்று இது தொடர்பாக தீர்வு காண ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்.
ஆனால் பேச்சுவார்த்தை குறித்து ஹவுத்தி அமைப்பின் மூத்த பிரதிநிதியான ஹமித் அசிம் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
அமெரிக்கா எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக கூறியிருப்பது எங்களுக்கு கிடைத்த வெற்றி’’ என்று ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தை குறித்து கூடுதல் தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.
தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.
சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானோ கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது. ஏமனில் நடக்கும் உள் நாட்டு போருக்கு லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏமன் அரசுடன் இணைந்து சவுதி நடத்தும் மனிதாபிமானமற்ற தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை முன்னரே கண்டித்திருந்தது.