

ஜிம்பாப்வே நாட்டை 37 ஆண்டுகள் ஆட்சி செய்த முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
இதுகுறித்து ராய்ட்டர்ஸ் வெளியிட்ட செய்தியில், "ஜிம்பாப்வேயின் முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே உடல் நலக் குறைவு காரணமாக சிங்கப்பூரிலுள்ள மருத்துவமனை ஒன்றில் சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்திருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி முகாபே மரணமடைந்தார்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
முகாபே மரணமடைந்ததை அவரது ட்விட்டர் பக்கத்திலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மறைந்த ராபர்ட் முகாபேவுக்கு வயது 95.
ஜிம்பாப்வேவில் நடந்த புரட்சி
தெற்கு ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வே கடந்த 1980-ல் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்றது. இதையடுத்து, 1980 முதல் 1987 வரையில் ராபர்ட் முகாபே (93) பிரதமராக பதவி வகித்தார். பின்னர் 1987 முதல் அதிபராக பதவி வகித்து வந்தார். உலகிலேயே மிகவும் வயதான ஆட்சியாளராக முகாபே விளங்கினார்.
இந்த நிலையில் ஜிம்பாப்வேவில் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கடந்த 2017 ஆம் ஆண்டு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. இதன்மூலம் முகாபேயின் 37 ஆண்டு கால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. முகாபே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
முகாபேவை ஆட்சியிலிருந்து நீக்கியதைத் தொடர்ந்து ஜிம்பாப்வேயில் நடந்த முதல் பொதுத்தேர்தலில் ஆளும் கட்சியான ஜனு பி.எப். கட்சி வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து ஜிம்பாப்வேவின் அதிபராக எம்மர்சன் தேர்ந்தெடுக்கப்பட்டார்