

பஹாமஸில் வீசிய டோரியான் புயலில் சிக்கி பலர் மாயமாகியுள்ளதாகவும், அவர்களில் பலர் குழந்தைகள் என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கரிபீயன் தீவுகளில் உள்ள பஹாமஸ் மற்றும் அபகோ தீவுகளை டோரியான் புயல் செவ்வாய்க்கிழமை தாக்கியது. இதில் பெரும் சேதம் பஹாமஸ் தீவுக்கு ஏற்பட்டது. புயல் தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பஹாமஸில் ஏற்பட்ட புயல் பாதிப்பு குறித்து அந்நாட்டின் பிரதமர், ''இந்தத் தலைமுறைக்கான பேரழிவை இந்தப் புயல் விட்டுச் சென்றிருக்கிறது” என்று தெரிவித்தார்.
சுமார் 70 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வரும் நிலையில் டோரியான் புயலில் ஆயிரக்கணக்கானவர்கள் மாயமாகியுள்ளனர். இதில் பலர் குழந்தைகள் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிவாரண முகாம்களில் மக்கள்
மேலும் ஏராளமான மருத்துவமனைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இந்த டோரியான் புயலால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பஹாமஸில் ஏற்பட்ட புயலின் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
மேலும் பஹாமஸில் 45 % சதவீதம் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பலர் உணவின்றித் தவித்து வருவதாகவும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
பஹாமஸைத் தாக்கிய டோரியான் புயல் அடுத்து அமெரிக்காவின் கரோலினா மாகாணத்தைத் தாக்க உள்ளது. தற்போது டோரியான் புயல் வடக்கு கரோலினாவிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு கிழக்கை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அங்கு எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.