

இஸ்லாமாபாத்,
காஷ்மீர் தொடர்பாக ஆட்சேபகரமான கருத்துகள் ட்விட்டர் மூலம் பரப்பப்படுவதற்கு இந்தியா ஆட்சேபனை தெரிவித்ததை அடுத்து 333 பாகிஸ்தானியப் பயனர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இது ஒரு தலைப்பட்சமானது என பாகிஸ்தான் தெரிவித்துள்ளதாக டான் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
370 -வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர் காஷ்மீர் பற்றி எழுதப்பட்டதற்காக 333 ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஒப்புக் கொண்டுள்ளது. கடந்த (ஆகஸ்ட்) மாதத்தில் மட்டும் காஷ்மீர் பற்றி கருத்து வெளியிட்டமைக்காக சுமார் 200 ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
நீக்கப்பட்ட ட்விட்டர் கணக்குகளில் பத்திரிகையாளர்கள், ஆர்வலர்கள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் ராணுவ ட்வீட்டின் ரசிகர்களின் கணக்குகளே அதிகம் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பாகிஸ்தான் தொலைத் தொடர்பு ஆணையம் (பிடிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
''ட்வீட் பதிவுகளை நிறுத்திவைத்தல் மற்றும் ட்விட்டர் கணக்குகளை முடக்குவதில் ட்விட்டர் நிர்வாகம் பாரபட்சமாக நடந்துகொண்டுள்ளது. இந்த அணுகுமுறை ஒருதலைப்பட்சமானது ஆகும். காஷ்மீர் தொடர்பாக கருத்து வெளியிடுவதைக் காரணம் காட்டி ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டால் உடனடியாக புகார் அளிக்கும்படி பாகிஸ்தான் சமூக ஊடகப் பயனர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தற்போது ட்விட்டர் நிர்வாகத்தால் முடக்கப்பட்டுள்ள இதுபோன்ற 333 புகார்களை மீட்டெடுக்க ட்விட்டருக்கு பிடிஏ அனுப்பியது. இதில், 67 கணக்குகள் மட்டுமே மீட்கப்பட்டன. மற்றவை குறித்து ட்விட்டர் அதிகாரபூர்வமாகப் பதிலளிக்கவில்லை அல்லது இந்தக் கணக்குகளை நிறுத்துவதற்கு எந்தக் காரணமும் தெரிவிக்கவில்லை.
நீக்கப்பட்ட ட்விட்டர் கணக்குகளில் பத்திரிகையாளர்கள், ஆர்வலர்கள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் ராணுவ ட்வீட்டின் ரசிகர்களின் கணக்குகளே அதிகம். இந்நிலையில் பாகிஸ்தானில் சமூக ஊடகப் பயனர்களுக்கு கருத்துச் சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டியுள்ளது.
இப்பிரச்சினையில் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பது குறித்து ஒரு அர்த்தமுள்ள கலந்துரையாடலுக்கு ட்விட்டர் நிர்வாகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அவர்களிடமிருந்து இன்னும் எந்தவிதமான பதிலும் வரவில்லை''.
இவ்வாறு பாகிஸ்தான் தொலைத் தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
மின்னணு தளத்தின் பயனர்கள் தங்களது ட்வீட்களை நிறுத்தி வைப்பது அல்லது அவர்களின் கணக்குகளைத் தடுப்பது குறித்த புகார்களை content-complaint@pta.gov.pk. என்ற மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்யுமாறு தொலைத் தொடர்புத் துறை கட்டுப்பாட்டாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.