

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் காரில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் 3 பேர் பலியாகினர். 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இதுகுறித்து ஆப்கன் ஊடகங்கள், “ ஆப்கன் தலை நகர் காபூலின் கிழக்குப் பகுதியில் அமெரிக்க தூதரத்துக்கு அருகே காரில் வைக்கப்பட்ட குண்டு வெடித்தது. இதில் 3 பேர் பலியாகினர். 30க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வாரத்தில் அமெரிக்க தூதரகத்துக்கு அருகில் ஏற்பட்ட இரண்டாவது தீவிரவாத தாக்குதல் இது வாகும்.”
இந்தத் தாக்குதல் குறித்து காபூல் நகர் உயர் போலீஸ் அதிகாரி பிர்டஸ்கூறும்போது, “ ”இந்தத் தாக்குதல் சோதனை சாவடியை மையமாக வைத்து நடத்தப்பட்டுள்ளது. ஏனெனில் இப்பகுதியில் ஆப்கன் பாதுகாப்பு அதிகாரிகளின் அலுவலங்கள் உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தலிபான்கள் கடந்த திங்கட்கிழமை காபூலின் வடக்கு பகுதியில் சர்வதேச நிறுவனம் ஒன்றில் நடத்திய தாக்குதலில் 16 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப் படையும் அங்கு முகாமிட்டுள்ளது.இதில் சில நாட்களுக்கு தலிபான்களின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண தலிபான்களுடன் ஆப்கானிஸ்தான் அரசும், அமெரிக்க அரசும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் தொடர்ந்து தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.