ஜாகீர் நாயக்கை இந்தியாவுக்கு அனுப்பும் விவகாரம்: மலேசியப் பிரதமரிடம் எழுப்பிய பிரதமர் மோடி

மலேசியப் பிரதமர் மகாதிர் முகதுவைச் சந்தித்த பிரதமர் மோடி: படம் ஏஎன்ஐ
மலேசியப் பிரதமர் மகாதிர் முகதுவைச் சந்தித்த பிரதமர் மோடி: படம் ஏஎன்ஐ
Updated on
2 min read

விளாதிவோஸ்டோக்,

ரஷ்யாவின் விளாதிவோஸ்டோக் நகரில் நடக்கும் கிழக்கு மண்டலப் பொருளாதார மாநாட்டில் மலேசியப் பிரதமர் மகாதிர் முகமதுவை இன்று சந்தித்த பிரதமர் மோடி, இஸ்லாமிய மதப் பிரச்சாரகர் ஜாகீர் நாயக்கை இந்தியாவுக்கு அனுப்புவது குறித்துப் பேசியுள்ளார்.

இஸ்லாமிய மதப்பிரச்சாரம் செய்பவரான மும்பையைச் சேர்ந்த 53 வயது ஜாகீர் நாயக் மீது தீவிரவாதம் தொடர்பாக ஐஎன்ஏ பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. அவரின் பல கோடி மதிப்புள்ள சொத்துகளையும் அமலாக்கப் பிரிவினர் முடக்கியுள்ளனர். ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக மலேசியாவில் ஜாகீர் நாயக் வாழ்ந்து வருகிறார்.

சமீபத்தில் மலேசியாவில் வாழும் இந்துக்களுக்கும், சீனர்களுக்கும் எதிராக ஜாகீர் நாயக் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகப் புகார்கள் எழுந்தன. இதனால் மலேசியாவில் பொதுமக்கள் மத்தியில் மதப்பிரச்சாரம் செய்ய ஜாகீர் நாயக்கிற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவில் உள்ள விளாதிவோஸ்டக் நகரில் கிழக்கு பொருளாதாரக் கூட்டமைப்பு மாநாடு செப்டம்பர் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை 2 நாட்கள் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி பங்கேற்கச் சென்றார்.

இந்த மாநாட்டின் 2-ம் நாளான இன்று மலேசியப் பிரதமர் மகாதிர் முகமதுவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். அப்போது மலேசியாவில் வாழ்ந்து வரும் முஸ்லிம் மதப்பிரச்சாரம் செய்பவரான ஜாகீர் நாயக்கை இந்தியாவுக்கு நாடு கடத்துவது குறித்து பிரதமர் மோடி பேசியுள்ளதாகத் தெரிகிறது.

இதுகுறித்து வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே நிருபர்களிடம் இன்று கூறியதாவது:

"மலேசியாவில் உள்ள ஜாகீர் நாயக் மீது இந்தியாவில் தீவிரவாதம் தொடர்பாக பல குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அவரை நாடு கடத்துவது தொடர்பாக மலேசியப் பிரதமரிடம் பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக இரு தலைவர்களும் பேசியுள்ளனர். இரு தலைவர்களும் தொடர்ந்து தொடர்பில் இருப்பார்கள்.

பிரதமர் மோடியின் கோரிக்கைக்கு மலேசியப் பிரதமர் சாதகமான முறையில்தான் பதில் அளித்துள்ளார். ஆனால் இது தொடர்பாக தலைவர்கள் மட்டத்தில் பேசாமல் இருநாட்டு அதிகாரிகள் மட்டத்தில் பேசி எவ்வாறு ஜாகீர் நாயக்கை விரைவாக இந்தியா கொண்டுவந்து சட்டத்தின் முன் நிறுத்துவது குறித்து பேசப்படும்.

தீவிரவாதம் குறித்து பிரதமர் மோடியும், மலேசியப் பிரதமர் மகாதிர் முகமதுவும் பேசினார்கள். தீவிரவாதத்தை அனைத்து விதத்தில் வருவதையும் எதிர்க்க வேண்டும் என்று மலேசியப் பிரதமர் தெரிவித்துள்ளார். தீவிரவாதத்தை எவ்வாறு ஒழிப்பது என்பது குறித்து இரு தலைவர்களும் பேசினார்கள்.

ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்தும் பிரதமர் மோடி மலேசியப் பிரதமரிடம் விளக்கிக் கூறியுள்ளார். 370 பிரிவை திரும்பப் பெற்றதன் நோக்கம், ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு திறமையான நிர்வாகம், சமூக நீதி கிடைக்கவே இந்தத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதத்துக்கு ஜம்மு காஷ்மீர் இத்தனை ஆண்டுகளாக ஆளாகி இருந்தது என்பதை பிரதமர் மோடி தெரிவித்தார். இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், ஏற்றுமதி, இறக்குமதி ஆகியவை குறித்தும் இரு தலைவர்களும் பேசியுள்ளனர்".

இவ்வாறு கோகலே தெரிவித்தார்.

ஆனால், ஜாகீர் நாயக்கின் சர்ச்சைக்குரிய பேச்சுக்குப் பின் அவரை இந்தியா அனுப்புவது தொடர்பாக இதுவரை மலேசிய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனால் அவர் தொடர்ந்து மலேசிய அதிகாரிகளின் கண்காணிப்பில்தான் இருந்து வருகிறார்.

சமீபத்தில் மலேசிய உள்துறை அமைச்சர் டான் ஸ்ரீ முகியதீன் யாசின் கூறுகையில், "நாட்டின் சட்டத்துக்கு அப்பாற்பட்டு யாரும் இல்லை. அது நிரந்தரமாகத் தங்கி இருப்பவரும் சரி, அல்லது ஜாகீர் நாயக்காக இருந்தாலும் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர் இல்லை" எனத் தெரிவித்திருந்தார்.

ஐஏஎன்எஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in