Published : 04 Sep 2019 06:38 PM
Last Updated : 04 Sep 2019 06:38 PM

பாக். ராணுவத்தை தாக்கிப் பேசும் இம்ரான்கான்: சமூக வலைதளத்தில் வைரலான பழைய வீடியோ 

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் ராணுவத்தை பாராட்டிவரும் இம்ரான் கான் ஒரு காலத்தில் அந்த நாட்டு ராணுவத்தை எப்படியெல்லாம் தாக்கி விமர்சித்தார் என்பதை காட்டும் பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வெளிநாட்டு கொள்கைகள், தேர்தல் உள்ளிட்ட உள்நாட்டுப் பிரச்னைகளில் ராணுவத்தை ஆதரித்து அதனோடு இணைந்து செயல்பட்டு வருபவர் இம்ரான் கான் என்று அவர் மீது கருத்து இருக்கும் நிலையில் பழைய வீடியோ ஒன்று வெளியாகி இம்ரான் கானின் இன்னொரு முகத்தைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

அவரது முரண்பாடான நிலைப்பாட்டை விமர்சிக்கும் நெட்டிஸன்கள் அவரது வீடியோ பேச்சை வைரலாக்கியுள்ளனர்.

அந்த வீடியோவில், ஒரு கூட்டத்தில் கான் பேசியதாவது:

''பாகிஸ்தான் ராணுவத்தினர் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட தங்கள் சொந்த மக்களைக் கொன்று குவித்துள்ளார்கள். பலூசிஸ்தானில் நீதித்துறைக்குப் புறம்பான பல கொலைகளை ராணுவத்தினர் செய்வதுவருகின்றனர். நமது ராணுவம் பலூசிஸ்தானில் அங்குவாழும் மக்கள் மீது குண்டு வீசுகிறது, நாமே நமது சொந்த மக்கள் மீது எப்படி குண்டு வீச முடியும், உங்கள்மீது உங்கள் ராணுவம் குண்டு வீசுமா?

அவர்கள் நமது சொந்த மக்கள். நாமே அவர்களின் சொந்த குழந்தைகளின்மீது எப்படி வெடிகுண்டு வீசுகிறோம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம், கிராமங்களில் வசிக்கும் பெண்கள் நீதிக்கே புறம்பான வகையில் குழந்தைகளுடன் குண்டுவீசி கொல்லப்படுகிறார்கள்.

நீங்கள் பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் குண்டு வீசிக்கொண்டே அங்குள்ள ஆறு மில்லியன் மக்களைப் பற்றி பேசுகிறீர்கள். அவர்களின் பொருளாதாரம் அழிக்கப்பட்டுள்ளது. அகதி முகாம்களில் வாழும் அந்த மக்கள் எப்படி பிழைப்பார்கள் என்பது பற்றி யோசித்தீர்களா? அங்கே நீதித் துறைக்கு புறம்பான கொலைகள் நடந்துகொண்டிருப்பது பற்றி தெரியுமா?

பலூசிஸ்தானில் மனிதகுலத்திற்கு எதிரான கொடுமைகள் அரங்கேறி வருகின்றன.''

வீடியோவில் இவ்வாறு பாகிஸ்தான் பிரதமர் பேசுகிறார்.

ஜூலை மாதத் தொடக்கத்தில், இம்ரான் கான் அமெரிக்காவில் நடந்த ஒரு சமூக நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பலூசிஸ்தான் சார்பு ஆர்வலர்கள் மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.

பலூசிஸ்தானுக்கான 'உலக பலூச் அமைப்பு' ஒரு ட்விட்டர் பதிவில், "பாகிஸ்தானில் அதிகாரிகளால் செயல்படுத்தப்பட்ட சித்திரவதை மற்றும் நீதித்துறைக்கு புறம்பான கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜனாதிபதி @realDonaldTrumpஐ நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்." என்று கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதே போல இன்னொரு ட்விட்டில் வேறொரு பயனர் "#TerroristNationPakistan, #BalochistanWantsFreedom @UN @UN_HRC ஆள்
கடத்தல், கற்பழிப்பு மற்றும் கொலை" என்று பதிவிட்டுள்ளார்.

- ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x