

விளாதிவோஸ்டக்,
2020-ம் ஆண்டு மே மாதம் மாஸ்கோவில் நடக்கும் வெற்றிநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க வர வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் பதின் அழைப்பு விடுத்துள்ளார்.
இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் தலைமையிலான ஜெர்மன் நாசிப் படையை, ஸ்டாலின் தலைமையிலான ரஷ்யாவின் செம்படைகள் தோற்கடித்தன. ரஷ்யாவின் ஸ்டாலின் கிராடிலிருந்து ஜெர்மனியின் பெர்லின் வரை நாசிப்படைகளைத் துரத்திச் சென்று தாக்கின ரஷ்யப்படைகள்.இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வருவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றான இந்த வெற்றியை, ஆண்டுதோறும் ரஷ்யா வெற்றி நாளாகக் கடைபிடிக்கிறது.
கிழக்கு பொருளாதாரக் கூட்டமைப்பு மாநாடு ரஷ்யாவில் உள்ள விளாதிவோஸ்டக் நகரில் செப்டம்பர் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை 2 நாட்கள் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி பங்கேற்க சென்றார். ரஷ்யாவின் தூரக் கிழக்கு மண்டலத்துக்கு பிரதமர் மோடி செல்வது இதுதான் முதல் முறையாகும்.
ரஷ்யாவின் விளாதிவோஸ்டக் நகரை இந்திய நேரப்படி காலை 5.09 மணிக்குச் பிரதமர் மோடி சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளி்க்கப்பட்டது. அதன்பின் அதிபர் விளாதிமிர் புதினைச் சந்தித்து பிரதமர் மோடி. பிரதமர் மோடியைச் சந்தித்ததும், அதிபர் புதின் ஆரத்தழுவி வரவேற்றார்.
இரு தலைவர்களும் இரு தரப்பு நாடுகள் தொடர்பான விவகாரங்கள், சர்வதேச விவகாரங்கள் குறித்து பேச்சு நடத்தினர். அதன்பின் ஜேஸ்டா கப்பல் கட்டும் துறைமுகத்தை அதிபர் புதினுடன் சென்று பிரதமர் மோடி பார்வையிட்டார். இந்த சந்திப்பின்போது, பிரதமர் மோடியிடம் அடுத்த ஆண்டு நடைபெறும் வெற்றி நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அதிபர் புதின் அழைப்பு விடுத்தார்.
இதுகுறித்து ரஷிய அரசின் டாஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், " ரஷியாவில் 2020-ம்ஆண்டு மே மாதம் மாஸ்கோவில் நடக்கும் 75-வது வெற்றி நாள் கொண்டாட்டத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என எதிர்பார்க்கிறோம் என்று அதிபர் விளாதிமிர் புதின் அழைப்பு விடுத்தார். வரும் நவம்பர் மாதம் பிரேசில் நாட்டில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடியைச் சந்திக்க இருக்கிறேன் என்று தெரிவித்தார்.
கிழக்கு மண்ட பொருளாதார மாநாட்டில் தனது அழைப்பின் பெயரில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு அதிபர் புதின் நன்றி தெரிவி்த்தார். பிரதமர் மோடி விளாடிவோஸ்தக் நகருக்கு வந்தது மிகப்பெரிய கவுரவம் என்று அதிபர் புதின் பெருமையுடன் குறிப்பிட்டார். வர்த்தகம், முதலீடு, தொழில்துறை, ராணுவம், பாதுகாப்பு, தொழில்நுட்பம், கல்வி, கலாச்சாரம் உள்ளிட்டவே அடங்கிய மிகப்பெரிய அளவில் இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தங்கள் முடிவாகியுள்ளன.
இந்தியாவும், ரஷியாவும் சர்வதேச அரங்கில் தொடர்ந்து கூட்டாக செயல்படும், ஒருவொருக்கு ஒருவர் ஆதரவாக செயல்படுவார்கள். சர்வதே அளவில் நிலவும் முக்கிய விவரங்களில் இரு நாடுகளும் மிகவும் நெருக்கமாகவே செயல்படுகின்றன என்று அதிபர் புதின் குறிப்பிட்டார் என்று செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிடிஐ