

ஹாங்காங் விவகாரத்தில் வெளிநாட்டு சக்திகள் தலையிட அனுமதியில்லை என்று இந்தியாவுக்கான சீனத் தூதர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை சன் வைய்டாங் கூறும்போது, “ஹாங்காங் விவகாரம் முழுக்க முழுக்க சீனாவின் உள்விவகாரம். இது சர்வதேச நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஹாங்காங்கில் எந்த இறையாண்மைப் பிரச்சினையும் இல்லை. ஹாங்காங் விவகாரத்தில் எந்த வெளிநாட்டு சக்திகளும் தலையிட நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை. சில நாடுகள் சீனாவின் உள்விவகாரங்களில் வெளிப்படையாகத் தலையிடுகின்றன. இதனை முழுவதுமாக எதிர்க்கிறோம். எங்களுடன் உள்ள வேறுபாடுகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றார்.
இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்து ஹாங்காங் விடுவிக்கப்பட்ட பின்னர் கடந்த 1997-ம் ஆண்டு சீனாவின் நிர்வாகப் பகுதிகளில் ஒன்றானது ஹாங்காங். சீனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஹாங்காங் நாட்டுக்கென தனி கரன்சி, சட்டம், அரசியலமைப்பு எல்லாம் உள்ளன.
இந்நிலையில் சீனாவுக்கு குற்றவாளிகளைப் பரிமாற்றம் செய்வதற்கான சட்டத் திருத்த மசோதாவை நிரந்தரமாக ரத்து செய்யக்கோரியும், சீனாவின் ஆதிக்கத்துக்கு எதிராகவும் ஹாங்காங்கில் மாணவர்கள் தலைமையிலான போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் அமெரிக்க போன்ற நாடுகள் ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.