

நரேந்திர மோடி பிரதமர் பதவியேற்கும் விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கலந்துகொள்ளவுள்ள நிலையில், இந்திய மீனவர்கள் 151 பேரை பாகிஸ்தான் விடுதலை செய்துள்ளது.
இந்தியாவுடன் நல்லுறவைப் பேணுவதன் அடையாளமாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காராச்சியின் மாலிர் சிறை அதிகாரி சையத் நஸீர் ஹுசைன் கூறும்போது, பாகிஸ்தான் உள்துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகங்களின் எழுத்துப்பூர்வமான உத்தரவின்பேரில் இந்தியக் கைதிகள் 59 பேர் விடுதலை செய்யப்படுவதாக தெரிவித்தார்.
இந்தக் கைதிகளில் பெரும்பாலானோர், பாகிஸ்தான் கடல் எல்லையில் மீன்பிடித்ததால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இதேபோல், சிந்து மாகாணத்தில் உள்ள ஹைதரபாத் சிறையில் இருந்து 92 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் அனைவரும் ஏ.சி. பேருந்தில் கராச்சியில் இருந்து வாகா எல்லைக்கு கொண்டு செல்லப்பட்டு, இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் 229 இந்திய மீனவர்கள் தற்போது சிறையில் உள்ளனர் என்றும், சுமார் 780 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் இந்தியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.