

ஏமனில் உள்நாட்டுப் போர் நடந்து வரும் சூழலில் அங்கு போர் குற்றங்கள் நடந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ.நா.வின் போர் குற்றக் கண்காணிப்பாளர்கள் செவ்வாய்க்கிழமை கூறும்போது, “ஏமனில் உள் நாட்டுப் போர் நடந்து வரும் சூழலில் நாட்டின் பல பகுதிகளில் ஏற்க முடியாத வன்முறைகள், கொலைகள், கொடுமைகள், பாலியல் ரீதியான துன்புறுத்தல் போன்ற குற்றங்கள் நடந்து வருகின்றன. இதற்குக் காரணமான நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்” என்று எச்சரித்துள்ளனர்.
தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.
சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானோ கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது. ஏமன் அரசுடன் இணைந்து சவுதி நடத்தும் மனிதாபிமானமற்ற தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை முன்னரே கண்டித்திருந்தது.
ஏமன் போர், அரசு மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கிடையே பேச்சுவார்த்தை மூலம் நிச்சயம் தீர்க்கப்படக் கூடிய ஒன்று என ஐக்கிய நாடுகள் சபை முன்னதாக தெரிவித்தது.