கொடிய தேனீயால் தாக்கப்பட்டு சிகிச்சை பெறும் 'மேன் வெர்சஸ் வைல்ட்' பியர் கிரில்ஸ்
'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சி தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் தேனீ ஒன்றால் தாக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த டிஸ்கவரி தொலைக்காட்சி சேனலின் 'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சி உலகப் புகழ் பெற்றதாகும். இந்த நிகழ்ச்சியின் நாயகன் பியர் கிரில்ஸ், அடர்ந்த வனப்பகுதியில் ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்வாறு உயிர் பிழைத்திருப்பது, அங்கிருந்து எப்படி தப்பி வருவது குறித்து மக்களுக்குக் கற்றுத் தருகிறார்.
உத்தரகாண்ட் மாநிலம் ஜிம் கார்பெட் தேசிய வன உயிரியல் பூங்காவில் பிரதமர் மோடி, வனவிலங்குப் பாதுகாப்பை மையக் கருத்தாக கொண்டு, பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளர் பியர் கிரில்ஸுடன் இணைந்து பங்கேற்ற 'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சி, ஆகஸ்ட் 12-ம் தேதி ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் பியர் கிரில்ஸ் பங்கேற்கும் ’ட்ரெஷர் ஐலேண்ட்’ என்ற புதிய நிகழ்ச்சியின் படப்ப்பிடிப்பு பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவில் நடந்து வந்தது. அப்போது பியர் கிரில்ஸ் கொடிய விஷத்தன்மை கொண்ட தேனீ ஒன்றால் தாக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து அந்தத் தீவில் வசிக்கும் மூளை அறுவை சிகிச்சை நிபுணரான மனோ சண்முகநாதன் என்பவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''எந்த மோசமான சூழலையும் சமாளித்துவிடும் பியர் கிரில்ஸ் தேனீயால் தாக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியாக உள்ளது. தேனீ கொட்டியதும் அவரது முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு வீங்கி விட்டது. அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வருகிறோம்” என்றார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு இதே போல் ஒருமுறை பியர் கிரில்ஸ் தேனீயால் தாக்கப்பட்டு, அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
