

இந்தியாவுடன் பாகிஸ்தான் எப்போதும் போரைத் தொடங்காது என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திங்கட்கிழமை பாகிஸ்தானில் நடந்த நிகழ்வு ஒன்றில் இம்ரான் கான் கூறும்போது, “நாங்கள் இந்தியாவுடன் எப்போதும் போர் தொடங்க மாட்டோம். இந்தியா - பாகிஸ்தான் இரு நாட்டிலும் அணு ஆயுதங்கள் உள்ளன. இதனால் ஏதேனும் பதற்றம் ஏற்பட்டாலும் உலகம் ஆபத்தைச் சந்திக்க நேரிடும்.
நான் இந்தியாவுக்கு ஒன்றைக் கூற விரும்புகிறேன். எந்தப் பிரச்சினைக்கும் போர் தீர்வானது அல்ல. போரில் வெற்றி பெற்றவரும் தோல்வி அடைந்தவரே. போர் என்பது மற்றுமொரு பிரச்சினைக்கான தொடக்கம்’’ என்று தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசு எடுத்த முடிவுகளைத் திரும்பப் பெற்று, காஷ்மீரில் கட்டுப்பாடுகளை நீக்கினால்தான் அமைதிப் பேச்சில் இனிமேல் ஈடுபடுவோம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முன்னரே திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.
மேலும், நிபந்தனைகளுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்றும் காஷ்மீர் விவகாரத்தைத் தீர்ப்பதற்கு போர் தீர்வல்ல என்றும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமுத் குரேஷி தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மத்திய அரசு, அரசியலமைப்பின் 370-வது பிரிவைத் திரும்பப் பெற்றது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை லடாக், ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது.
இந்திய அரசின் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியாவுடன் வர்த்தக உறவு, ரயில், பஸ் போக்குவரத்தையும் ரத்து செய்தது. சர்வதேச அளவில் காஷ்மீர் விவகாரத்தைக் கொண்டு சென்று வருகிறது.மேலும், செப்டம்பர் மாதம் ஐ.நா.வில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினையை பிரதானமாக எழுப்ப பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.