

பதவியிலிருந்து ராஜினாமா செய்வது என்னுடைய விருப்பம் என்று ஹாங்காங் நிர்வாக இயக்குனர் கேரி லேம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதத்தில் இருந்து ஹாங்காங் போராட்டக்காரர்கள் ஹாங்காங் அரசின் நிர்வாகத்திற்கு எதிராகவும், சீனாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் போராட்டம் நடத்தப்படுவதற்குத் தடை விதிக்கப்பட்ட அரசாங்கக் கட்டிடங்களில் தடையை மீறி போராட்டக்காரர்கள் பேரணி நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
ஹாங்காங்கில் சட்டம்-ஒழுங்கு சீர்கெடு அடைந்துள்ளதால் அதன் நிர்வாக இயக்குனர் தனது பதவியிலிருந்து விலகுமாறு குரல்கள் வலுத்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இதற்கு கேரி லேம் பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து கேரி லேம் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, “நான் ராஜினாமா செய்வது குறித்து சீன அரசுடன் இதுவரை பேசவில்லை. ராஜினாமா செய்வது என்பது என்னுடைய தனிப்பட்ட விருப்பம். கடந்த மூன்று மாதங்களாக எனக்குள் கூறிக்கொண்டு இருக்கிறேன். நானும் எனது குழுவும் ஹாங்காங்கிற்கு உதவுவதற்காக பதவியில் இருக்க வேண்டும். இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து ஹாங்காங்கை மீட்டு வழி நடத்த முடியும் என்று நானும் எனது நிர்வாகத்தில் உள்ளவர்களும் நம்பிக்கை கொண்டுள்ளோம். நிச்சயம் ஹாங்காங்கை பழைய நிலைக்குக் கொண்டு வருவோம்” என்று தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்து ஹாங்காங் விடுவிக்கப்பட்ட பின்னர் கடந்த 1997-ம் ஆண்டு சீனாவின் நிர்வாகப் பகுதிகளில் ஒன்றானது ஹாங்காங். சீனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஹாங்காங் நாட்டுக்கென தனி கரன்சி, சட்டம், அரசியலமைப்பு எல்லாம் உள்ளன.
இந்நிலையில் சீனாவுக்கு குற்றவாளிகளைப் பரிமாற்றம் செய்வதற்கான சட்டத் திருத்த மசோதாவை நிரந்தரமாக ரத்து செய்யக்கோரியும், சீனாவின் ஆதிக்கத்துக்கு எதிராகவும் ஹாங்காங்கில் மாணவர்கள் தலைமையிலான போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.