

அமெரிக்காவில் உள்ள ஒரு பள்ளியில் 'ஹாரி பாட்டர்' புத்தகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நாஷ்வில் நகரத்தில் அமைந்துள்ள ஒரு கத்தோலிக்கப் பள்ளி நேற்றைய தினம் (செப் 2) மாணவர்களுக்கு ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், இன்று முதல் ‘ஹாரி பாட்டர்’ புத்தககங்களுக்குப் பள்ளியில் தடை விதிக்கப்படுகிறத. இனி யாரும் அந்தப் புத்தகங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று கூறப்பட்டிருந்தது. இந்த அறிவிப்புக்குப் பிறகு பள்ளி நூலகத்தில் இருந்த ‘ஹார் பாட்டர்’ புத்தகங்களும் அப்புறப்படுத்தப்பட்டன.
இதுகுறித்து பள்ளியின் பேராயர் டான் ரீஹில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஹாரி பாட்டர் புத்தகங்கள் நல்ல மற்றும் தீய சக்திகளை முன்வைத்து கற்பனையாக எழுதப்பட்டிருந்தாலும், அது ஒரு புத்திசாலித்தனமான ஏமாற்று வேலை. ஆனால் இந்தப் புத்தகங்கள் கற்பனையாக இருந்தாலும் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சாபங்களும் மந்திரங்களும் உண்மையானவை.
இதை ஒருவர் படிக்கும்போது அவை தீய சக்திகளைக் கொண்டுவந்து விடுவதற்கான சாத்தியங்கள் அதிகம். அமெரிக்காவில் இருக்கும் சில பேய் ஓட்டுபவர்களிடம் இதுகுறித்துக் கேட்டபோது அவர்களும் இந்தப் புத்தகங்களை அப்புறப்படுத்துமாறு பரிந்துரைத்தனர்” என்றார்.
ஜேகே ரௌலிங் எழுதிய ’ஹாரி பாட்டர்’ புத்தகங்கள் 1997 முதல் 2007 வரை 7 பாகங்களாக வெளியாகி உலகமெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்தப் புத்தகங்கள் திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டு உலகம் முழுவதும் பெரும் வெற்றிகளைக் குவித்தன.